/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
25.2 கி.மீ., - ரூ.146 கோடி! அன்னுார் - மேட்டுப்பாளையம் நான்கு வழிச்சாலை: 1,342 மரங்களை வெட்ட நெடுஞ்சாலைத்துறை திட்டம்
/
25.2 கி.மீ., - ரூ.146 கோடி! அன்னுார் - மேட்டுப்பாளையம் நான்கு வழிச்சாலை: 1,342 மரங்களை வெட்ட நெடுஞ்சாலைத்துறை திட்டம்
25.2 கி.மீ., - ரூ.146 கோடி! அன்னுார் - மேட்டுப்பாளையம் நான்கு வழிச்சாலை: 1,342 மரங்களை வெட்ட நெடுஞ்சாலைத்துறை திட்டம்
25.2 கி.மீ., - ரூ.146 கோடி! அன்னுார் - மேட்டுப்பாளையம் நான்கு வழிச்சாலை: 1,342 மரங்களை வெட்ட நெடுஞ்சாலைத்துறை திட்டம்
ADDED : நவ 14, 2024 05:05 AM
கோவை: அவிநாசியில் இருந்து அன்னுார் வழியாக மேட்டுப்பாளையம் வரை, 25.2 கி.மீ., துாரத்துக்கு ரூ.146 கோடியில் நான்கு வழிச்சாலை அமைக்க, மாநில நெடுஞ்சாலைத்துறை டெண்டர் கோரியுள்ளது. இவ்வழித்தடத்தில், 1,342 மரங்கள் வெட்டப்பட உள்ளன.
சேலம், ஈரோடு, பெருந்துறை, திருப்பூர், அவிநாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்தவர்கள், அவிநாசியில் இருந்து அன்னுார் வழியாக மேட்டுப்பாளையம் மற்றும் ஊட்டிக்குச் செல்கின்றனர். இவ்வழித்தடம் தற்போது இரு வழிச்சாலையாக இருக்கிறது.
அதிகபட்சம், 23 அடி அகலமே இருக்கிறது. மிகவும் குறுகலாக இருப்பதோடு, வளைவுகள் அதிகமாக இருக்கின்றன. 'பீக் ஹவர்ஸில்' இவ்வழித்தடத்தில் வாகனங்கள் செல்லும்போது, போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. ஒரு வாகனத்தை இன்னொரு வாகனம் முந்துவதற்கு முயற்சிக்கும்போது, விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. மின் விளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் வாகனங்கள் இயக்குவது ஆபத்தாக இருக்கிறது. இரு சக்கர வாகனங்களில் செல்வோர் மிகுந்த அச்சத்துடன் பயணிக்க வேண்டியிருக்கிறது.
ரூ.250 கோடி
அந்தளவுக்கு இவ்வழித்தடத்தில் வாகன போக்குவரத்து அபரிமிதமாக இருப்பதால், சாலையை அகலப்படுத்த வேண்டு மென்கிற கோரிக்கை எழுந்தது.
அவ்வழியாக செல்லும் வாகனங்களை நெடுஞ்சாலைத்துறையினர் கணக்கெடுத்தனர். நாளொன்றுக்கு, 15 ஆயிரம் யூனிட் வாகனங்கள் கடந்து சென்றால், நான்கு வழிச்சாலை அமைக்கலாம்.
ஆனால், 22 ஆயிரம் வாகனங்கள் கடப்பது ஆய்வில் தெரியவந்தது. அவ்வழித்தடத்தில், அவிநாசியில் இருந்து அன்னுார் வழியாக, 35 கி.மீ., துாரத்துக்கு ரூ.250 கோடியில் நான்கு வழிச்சாலை அமைக்க மாநில நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டுள்ளது.
அதில், கோவை கோட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில், அவிநாசியில் இருந்து, 13வது கி.மீ., துாரத்தில் இருந்து அன்னுார் வழியாக, 38வது கி.மீ., வரை, 25.2 கி.மீ., நீளத்துக்கு மேட்டுப்பாளையம் வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்படுகிறது. முதல்வரின் ஊரக சாலை மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.146 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆறு இடங்களில் ரோடு சந்திப்புகள் மேம்படுத்தப்படும். 16 இடங்களில் பாலங்கள் அகலப்படுத்தப்படும்; 6 இடங்களில் பாலங்கள் புதிதாக கட்டப்பட உள்ளன. இத்திட்டத்துக்கான டெண்டர் கோரப்பட்டிருக்கிறது; டிச., 16 கடைசி நாள் என மாநில நெடுஞ்சாலைத்துறை அறிவித்திருக்கிறது. அவிநாசியில் இருந்து, 13வது கி.மீ., துாரம் வரையிலான சாலை, திருப்பூர் கோட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில் நான்கு வழிச்சாலையாக்கப்படும்.
வெட்டப்படும் மரங்கள்
இதுதொடர்பாக, மாநில நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ஞானமூர்த்தி கூறுகையில், ''அவிநாசி எல்லையில் இருந்து அன்னுார் வழியாக மேட்டுப்பாளையம் வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்படும். இவ்வழித்தடத்தில், 1,342 மரங்கள் வெட்ட வேண்டியிருக்கிறது.
அதற்கு மாற்றாக, 13 ஆயிரத்து, 420 மரக்கன்றுகள் நட்டு, வளர்க்கப்படும். வெட்ட உள்ள மரங்களை வனத்துறையினர் மதிப்பீடு செய்து வருகின்றனர். மாவட்ட பசுமை கமிட்டியில் ஒப்புதல் பெற்றபின், வெட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இச்சாலை அமைவதால், இவ்வழித்தடத்தில் போக்குவரத்து நெருக்கடி தவிர்க்கப்படும்,'' என்றார்.