/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
12 ஆண்டுகளில் ரூ.2.66 கோடி அபராதம்! தரமற்ற உணவு தயாரிப்புக்கு தண்டனை
/
12 ஆண்டுகளில் ரூ.2.66 கோடி அபராதம்! தரமற்ற உணவு தயாரிப்புக்கு தண்டனை
12 ஆண்டுகளில் ரூ.2.66 கோடி அபராதம்! தரமற்ற உணவு தயாரிப்புக்கு தண்டனை
12 ஆண்டுகளில் ரூ.2.66 கோடி அபராதம்! தரமற்ற உணவு தயாரிப்புக்கு தண்டனை
ADDED : ஜன 15, 2024 11:20 PM
கோவை;கடந்த, 12 ஆண்டுகளில், உணவு பாதுகாப்பு துறை சார்பில், மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், தரமற்ற உணவு விற்பனையில் ஈடுபட்டவர்களிடம் இருந்து, ரூ.2.66 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
காசு கொடுத்து சாப்பிடும் உணவு தரமாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருக்கிறது.
அனைத்து தரப்பு மக்களுக்கும், தரமான உணவு கிடைப்பதை உறுதி செய்ய, 2011ம் ஆண்டு உணவுப்பாதுகாப்பு துறை தனித்துறையாக மாற்றப்பட்டது.
துறை உணவு வணிகர்கள், தயாரிப்பாளர்கள் விநியோகஸ்தர்கள் மற்றும் உணவு விற்பனையாளர்கள் சுகாதாரமான, கலப்படமற்ற முறையில், உணவை தயாரித்து விற்பனை செய்கின்றனரா என்பதை கண்காணித்து வருகிறது.
பாதுகாப்பற்ற முறையில் உணவு விற்பனை செய்வது உறுதி செய்யப்பட்டால், அபராதம் விதிக்கப்படுகிறது. கடந்த, 12 ஆண்டுகளில், சேகரிக்கப்பட்ட உணவு மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, உணவு வணிகர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த, 12 ஆண்டுகளில் ரூ.2.66 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
12 ஆண்டுகளில்(கடந்த ஆக., 5, 2011 முதல், 2023 டிச., 31 வரை), உணவுப்பாதுகாப்பு துறை தனியாக பிரிக்கப்பட்ட பின் கோவை மாவட்டத்தில், 12 ஆண்டுகளில், 6,825 உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இதில், 6,102 உணவு மாதிரிகள் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன.
வழக்குகள்
உணவு மாதிரிகளின் முடிவின் அடிப்படையில், 647 கிரிமினல் வழக்குகள், 1,607 சிவில் வழக்குகள், என, மொத்தம், 2,252 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. மீதமுள்ள, 3,850 உணவு மாதிரிகள் தரநிலைகளுக்கு இணங்க இருந்தன.
தண்டனை விபரம்
கிரிமினல் வழக்குகள், 647 ல், 375 வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதில் தொடர்புடையவர்களுக்கு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சிவில் வழக்குகள், 1,605ல் 1,419 வழக்குகளில் தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
அபராத தொகை
மொத்தம், 375 கிரிமினல் வழக்குகளில் தொடர்புடையவர்களுக்கு, ஒரு கோடியே, 18 லட்சத்து, 75 ஆயிரத்து, 500 ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டது.
அதேபோல், சிவில் வழக்குகள், 1,419ல், தொடர்புடையவர்களுக்கு, ஒரு கோடியே, 47 லட்சத்து, 43 ஆயிரத்து, 500 ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டது. கடந்த, 12 ஆண்டுகளில், 2 கோடியே, 66 லட்சத்து, 19 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
''உணவுப்பாதுகாப்பு துறை சார்பில், தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பொதுமக்கள் உணவு கலப்படம் குறித்து புகார் அளிக்க முன் வர வேண்டும். உணவுப்பாதுகாப்பு துறையின், வாட்ஸ்ஆப் எண், 94440 42322 என்றஎண்ணில் புகார் அளிக்கலாம். https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்திலும் தெரிவிக்கலாம். Tn food safety consumer App வழியாகவும் புகார் கூறலாம்,''
- தமிழ்செல்வன், நியமன அலுவலர்
மாவட்ட உணவுப்பாதுகாப்பு துறை