/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் 362 வழக்கு நிலுவை
/
நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் 362 வழக்கு நிலுவை
ADDED : டிச 06, 2024 11:37 PM
கோவை; கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில், இந்தாண்டு நவ., வரையில், 362 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.
கோவை, கலெக்டர் அலுவலக வளாகத்தில், மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் செயல்பட்டு வருகிறது. நுகர்வோருக்கு ஏற்படும் சேவை குறைபாடு தொடர்பாக, வக்கீல்கள் வாயிலாகவோ அல்லது நுகர்வோர் நேரடியாகவோ வழக்கு தாக்கல் செய்யலாம்.
மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில், அதிக பட்சமாக ஒரு கோடி ரூபாய் வரை இழப்பீடு கேட்டு, வழக்கு தாக்கல் செய்ய முடியும். ஆன்லைன் வாயிலாக மட்டுமே, வழக்கு தாக்கல் செய்யும் முறை பின்பற்றப்பட்டு வருகிறது.
மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில், ஒவ்வொரு மாதமும் சராசரியாக, 30 புதிய வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன. விசாரணை முடிந்து, மாதந்தோறும், 30 வழக்குகள் வரை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
இந்தாண்டு கடந்த நவ., வரை, 370 புதிய வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில், 278 வழக்குகளில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நவம்பர் வரையில், 362 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் புதிய வழக்குகள் எவ்வளவு தாக்கல் செய்யப்படுகிறதோ, அதே அளவுக்கு வழக்குகளில் தீர்வும் காணப்படுகிறது. வழக்குகளில் விரைந்து தீர்வு காணப்படுவதால், நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை, கடந்த ஆண்டுகளை ஒப்பிடும் போது குறைவாகவே உள்ளது.
153 நிறைவேற்று மனு நிலுவை
விசாரணை முடிந்து தீர்ப்பு அளிக்கப்பட்ட பிறகு, ஒரு மாதத்திற்குள், மனுதாரருக்கு இழப்பீட்டு தொகையினை எதிர் மனுதாரர் வழங்க வேண்டும். உத்தரவுக்கு எதிராக, மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில், மேல்முறையீடு செய்யவும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
மேல்முறையீடு செய்யாமல், இழப்பீடு தொகை வழங்க தவறும் பட்சத்தில், உத்தரவை நிறைவேற்ற கோரி, அதே ஆணையத்தில் மனுதாரர் நிறைவேற்று மனு தாக்கல் செய்யலாம். அதன்படி, நவ.,வரை, 153 நிறைவேற்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது.