/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
56வது வார்டு இடைத்தேர்தல்; ஆயத்தமாகிறது தி.மு.க.,
/
56வது வார்டு இடைத்தேர்தல்; ஆயத்தமாகிறது தி.மு.க.,
ADDED : ஏப் 10, 2025 11:24 PM

கோவை : கோவை மாநகராட்சி, 56வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு நடைபெற உள்ள இடைத்தேர்தல் பணிக்கு, தி.மு.க., சார்பில் ஓட்டுச்சாவடி வாரியாக பொறுப்பாளர்கள் நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சியில் காலியாக உள்ள, 56வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அடுத்த மாதம் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகள் நடந்து வருகின்றன. இவ்வார்டில் மட்டும், 16 ஆயிரத்து, 150 வாக்காளர்கள் உள்ளன. மூன்று பள்ளிகளில், 16 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.
காங்கிரஸ் வெற்றி பெற்ற இடம் என்றாலும் கூட, இம்முறை யாருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என தி.மு.க., தலைமை முடிவெடுக்கும் என கூறப்பட்டுள்ளது. கூட்டணி கட்சிகளுக்கு வார்டை ஒதுக்கினாலும், தி.மு.க.,வினரே தேர்தல் பணியாற்றி, ஜெயிக்க வைக்க வேண்டிய நிலை காணப்படுகிறது. அதற்காக, வாக்காளர்களை சந்திக்க, தி.மு.க., இப்போதே தயாராக ஆரம்பித்து விட்டது. இதுதொடர்பான ஆலோசனை கூட்டம், கோவை மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்திக் தலைமையில் நடந்தது. பகுதி கழக செயலாளர் சாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பஙகேற்றனர்.
ஓட்டுச்சாவடிக்கு ஒருவர் வீதம், 16 பொறுப்பாளர்கள் நியமிக்க முடிவு செய்யப்பட்டது. அந்த வார்டுக்கு உட்பட்ட வீதிகளில் என்னென்ன வேலைகள் செய்ய வேண்டும்; ஏற்கனவே நிதி ஒதுக்கப்பட்ட வேலைகள் செய்யப்பட்டு விட்டனவா; டெண்டர் கோரிய பணிகளின் தற்போதைய நிலை என்பதை அறிந்து, அவற்றை விரைவுபடுத்த குழு அமைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

