/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குளங்களில் விடப்பட்ட 60 ஆயிரம் மீன் குஞ்சுகள்; மீன் வளர்ப்புக்கு அதிகாரிகள் அழைப்பு
/
குளங்களில் விடப்பட்ட 60 ஆயிரம் மீன் குஞ்சுகள்; மீன் வளர்ப்புக்கு அதிகாரிகள் அழைப்பு
குளங்களில் விடப்பட்ட 60 ஆயிரம் மீன் குஞ்சுகள்; மீன் வளர்ப்புக்கு அதிகாரிகள் அழைப்பு
குளங்களில் விடப்பட்ட 60 ஆயிரம் மீன் குஞ்சுகள்; மீன் வளர்ப்புக்கு அதிகாரிகள் அழைப்பு
ADDED : அக் 09, 2024 10:39 PM

அன்னுார் : அன்னுார் குளங்களில், 60,000 மீன் குஞ்சுகள் விடப்பட்டன. மீன் வளர்ப்புக்கு அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில், தமிழகத்தில், ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள குளம், குட்டைகளில், மீன் உற்பத்தி திறனை முழுமையாக பயன்படுத்தும் வகையில், 5,000 ஹெக்டேர் பரப்பில், ஒரு ஹெக்டேருக்கு 2000 மீன் குஞ்சுகள் வீதம், ஒரு கோடி மீன் குஞ்சுகள் விடப்படும் என கடந்த பட்ஜெட் கூட்டத்தில் அரசு அறிவித்தது.
இதைத் தொடர்ந்து கோவை மாவட்டத்தில், 30 ஹெக்டேர் பரப்பளவுக்கு, ஊராட்சிகளுக்கு சொந்தமான குளங்களில் 60,000 மீன் குஞ்சுகள் விட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. நேற்று கஞ்சப்பள்ளியில் உள்ள 95 ஏக்கர் பரப்பளவு எருக்கலாம் குளத்தில், 30 ஆயிரம் மீன் குஞ்சுகள் விடப்பட்டன. இதில் ஊராட்சி தலைவர் சித்ரா மற்றும் வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் மீன்வளத்துறை மண்டல துணை இயக்குனர் தில்லை ராஜன் பங்கேற்று பேசுகையில், இங்கு கட்லா, ரோகு, மிருகால் ஆகிய மூன்று வகைகளை சேர்ந்த அறுபது நாட்கள் ஆன குஞ்சுகள் விடப்படுகின்றன. பவானிசாகரில் உள்ள அரசு மீன் பண்ணையிலிருந்து இவை கொண்டு வரப்பட்டு உள்ளன. இவை எட்டு மாதங்களில் விற்பனைக்கு தயாராக வளர்ந்து விடும், என்றார்.
மீன் வளத்துறை உதவி இயக்குனர் கொளஞ்சிநாதன் பேசுகையில், பொதுமக்கள், விவசாயிகள் தங்களுக்கு சொந்தமான இடத்தில் மண் வசதி, நீர் வசதி இருந்தால் மீன் வளர்க்கலாம். மீன் வளர்ப்புக்கு 40 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. மீன் குஞ்சுகள் வளர்க்கவும் மானியம் வழங்கப்படுகிறது.
அலங்கார மீன் வளர்க்க, மீன் விற்பனைக்கான கடை அமைக்க, மீன் விற்பனை வாகனம் வாங்க என அனைத்துக்கும் 40 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.
இத்துடன் பெண்கள் மற்றும் ஆதிதிராவிடர் வகுப்பினருக்கு, 60 சதவீதம், மானியம் வழங்கப்படுகிறது. கோவை மாவட்டத்தில், மீன் வளர்ப்புக்கு, ஆர்வம் உள்ளோர் ஆய்வாளரை 85088 99009 என்கிற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என்றார். ஒட்டர்பாளையம் ஊராட்சியில் 80 ஏக்கர் பரப்பளவு உள்ள பூலுவ பாளையம் குளத்தில் 20 ஆயிரம் மீன் குஞ்சுகள் விடப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் ஊராட்சிகளின் உதவி இயக்குனர் சரவணன், ஒன்றிய சேர்மன் அம்பாள் பழனிசாமி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி ஆகியோர் பங்கேற்றனர்.
வடக்கலூர் ஊராட்சியில் உள்ள 35 ஏக்கர் பரப்பளவு குளத்தில், 10 ஆயிரம் மீன் குஞ்சுகள் விடப்பட்டன. இதில் ஊராட்சித் தலைவர் ராஜ்குமார் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர். அன்னுார் வட்டாரத்தில் மூன்று குளங்களிலும் சேர்த்து 60 ஆயிரம் மீன் குஞ்சுகள் வளர்ப்புக்கு நேற்று விடப்பட்டன.