/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
75 மண் மாதிரிகள், 25 நீர் மாதிரிகள் சேகரிப்பு; விவசாயிகளுக்கு விழிப்புணர்வு
/
75 மண் மாதிரிகள், 25 நீர் மாதிரிகள் சேகரிப்பு; விவசாயிகளுக்கு விழிப்புணர்வு
75 மண் மாதிரிகள், 25 நீர் மாதிரிகள் சேகரிப்பு; விவசாயிகளுக்கு விழிப்புணர்வு
75 மண் மாதிரிகள், 25 நீர் மாதிரிகள் சேகரிப்பு; விவசாயிகளுக்கு விழிப்புணர்வு
ADDED : ஆக 11, 2025 08:44 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய கிராமங்களில், 75 மண் மாதிரிகள், 25 நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை நடமாடும் மண் பரிசோதனை நிலையத்தின் மண் மாதிரி சேகரிப்பு முகாம், பொள்ளாச்சி அருகே மண்ணுார், ராமபட்டிணம் மற்றும சுற்றுப்பகுதி கிராமங்களில் நடைபெற்றது.
விவசாயிகளிடையே மண் பரிசோதனையின் முக்கியத்துவம் மற்றும் மண் மாதிரி சேகரிப்பு முறைகள் குறித்து நடமாடும் மண் பரிசோதனை நிலைய அலுவலர்கள் விளக்கமளித்தனர்.
விவசாயிகள் ஆர்வமுடன் பங்கேற்று, மண் மாதிரிகள், நீர் மாதிரிகளை ஆய்வுக்கு கொண்டு வந்தனர்.இதில், 75 மண் மாதிரிகள், 25 நீர் மாதிரிகள் பெறப்பட்டன.
சத்துக்களின் அடிப்படையில் உரப்பரிந்துரை மேற்கொள்வதன் வாயிலாக அதிக மகசூல் பெற மேற்கொள்ள வேண்டிய மண் சீர்திருத்த முறைகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டது.
அதிகாரிகள் கூறியதாவது:
பயிர் அறுவடை முடிந்த பின், அடுத்த பயிருக்கு நிலத்தை தயார் செய்வதற்கு முன் அல்லது உரமிட்ட மூன்று மாதத்துக்கு பின், மண் மாதிரி எடுக்க வேண்டும்.தற்போது, சாகுபடியில் உள்ள நிலங்களில் மண்ணில் உள்ள பிரச்னைகளை அறிய மண் மாதிரி சேகரிக்க வேண்டி இருந்தால், பயிர் வரிசையில் நடுவில் மாதிரிகள் சேகரிக்க வேண்டும்.
நிலத்தில் மணல் பாங்கான, கரிசல், செம்மண் பகுதி ஆகியவற்றுக்கு தனித்தனியே மண் மாதிரி எடுக்க வேண்டும்.
எரு குவித்த இடங்களின் ஓரங்கள், மரங்களின் நிழல் படரும் பகுதிகள், நீர்க்கசிவு உள்ள இடங்களில் மாதிரிகள் சேகரிக்க கூடாது.
சேகரிக்கும் முறை மண் மாதிரிகள் சேகரிக்கும் போது, ஒரே மாதிரியாக தோன்றும் நிலத்தின் பகுதிகளை ஒரு பாகமாக குறித்துக் கொண்டு, அதிலிருந்து குறுக்கு நெடுக்காக, 10 முதல் 15 மண் மாதிரிகள் சேகரிக்க வேண்டும்.
மண் மாதிரி எடுக்க வேண்டிய இடத்தில் உள்ள இலை, சருகு, புல் இருந்தால், ஆகியவற்றின் மேல் மண்ணை அப்புறப்படுத்த வேண்டும்.
நெல், ராகி, கம்பு, கடலை போன்ற குட்டை வேர் பயிர்களுக்கு, 15 செ.மீ., அல்லது அரை அடி; பருத்தி, கம்பு, மிளகாய், மரவள்ளி போன்ற ஆழமான வேர் பயிர்களுக்கு, 22 செ.மீ., அல்லது முக்கால் அடி; திராட்சை, மா போன்ற பழத்தோட்ட மற்றும் மர பயிர்களுக்கு மூன்று அடி ஆழமுள்ள குழி தோண்டி அதில் ஒரு அடியிலே ஒரு மண் மாதிரியும், இரண்டாம் அடியில் ஒரு மண் மாதிரியும், மூன்றாவது அடியில் ஒரு மண் மாதிரி என, மூன்று மண் மாதிரிகளை தனித்தனியே எடுக்க வேண்டும்.
வெட்டிய 'வி' வடிவ குழியினை ஓரமாக மேலிருந்து கீழாகவும், கீழிருந்து மேலாகவும், இரண்டு புறமும் ஒரே சீராக மண்வெட்டியினால் ஒரு அங்குலத்துக்கு மண்ணை வெட்டி எடுக்க வேண்டும். ஒரு வயலில் இதுபோல் குறைந்தது பத்து முதல் 15 இடங்களில் மண் சேகரித்து ஒன்றாக கலந்து, வேர், தண்டு, கல் போன்றவற்றை அப்புறப்படுத்த வேண்டும். மண் ஈரமாக இருந்தால் நிழலில் உலர்த்த வேண்டும்.
இவ்வாறு சேகரிக்கப்பட்ட மண்ணை சுத்தமான தரையில் அல்லது பேப்பர் விரிப்பின் மேல் சமமாக வட்ட வடிவில் பரப்ப வேண்டும்.
நிவர்த்தி முறை பிளஸ் குறியீட்டில், நான்கு பங்கில் எதிரெதிரில் உள்ள இரண்டு பாகங்களை நீக்க வேண்டும். மீண்டும் வட்ட வடிவில் பரப்பி குறியீட்டு பகுதியினை பகுத்து பிரித்து கடைசியில், அரை கிலோ எடை வரும் வரை திரும்பத் திரும்ப, இதே முறையில் மண்ணின் அளவை குறைக்க வேண்டும். இதை உலர்ந்த பாலித்தீன் பை அல்லது துணிப்பையில் இட்டு, ஆய்வு கூடத்துக்கு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.

