/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிஞ்சு விரல்கள் எழுதிய அ... ஆ...! கோலாகலமாக நடந்தது 'தினமலர்' வித்யாரம்பம்
/
பிஞ்சு விரல்கள் எழுதிய அ... ஆ...! கோலாகலமாக நடந்தது 'தினமலர்' வித்யாரம்பம்
பிஞ்சு விரல்கள் எழுதிய அ... ஆ...! கோலாகலமாக நடந்தது 'தினமலர்' வித்யாரம்பம்
பிஞ்சு விரல்கள் எழுதிய அ... ஆ...! கோலாகலமாக நடந்தது 'தினமலர்' வித்யாரம்பம்
ADDED : அக் 12, 2024 11:22 PM
'தினமலர்' நாளிதழ் பட்டம் மாணவர் பதிப்பு மற்றும் எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனங்கள் சார்பில், கோவையில் நேற்று வித்யாரம்பம் நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது.
விஜயதசமி அன்று துவங்கும் எந்தவொரு நிகழ்வாக இருந்தாலும், ஜெயத்தில் முடியும் என்பது மக்களின் நம்பிக்கை. அன்றைய தினம் நெல்மணிகளில், 'அ... ஆ...' எழுத வைத்து குழந்தைகளின் கல்விக்கு பிள்ளையார் சுழி போடுவது மரபு. சரஸ்வதி தேவியின் அருள் கடாட்சம் முழுமையாகக் கிடைக்கும் வகையில், விஜயதசமி நாளான நேற்று, 'தினமலர்' நாளிதழ் சார்பில், வித்யாரம்பம் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வித்யாரம்பம் நிகழ்ச்சி
கோவை, ராம்நகர் சத்தியமூர்த்தி ரோட்டில் உள்ள ஸ்ரீஐயப்பன் பூஜா சங்கத்தில், நேற்று காலை, 7:30 முதல், 10:30 மணி வரை, வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது. தட்டில் நிறைந்திருந்த நெல் மணிகளில், மஞ்சள் கிழங்கு கொண்டு, அ... ஆ... என்ற அரிச்சுவடிகளை குழந்தைகள் எழுதினர். சிறப்பு விருந்தினர்களான, கோவை கலெக்டர் கிராந்திகுமார், மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், பண்ணாரியம்மன் கல்வி குழுமங்களின் தலைவர் பாலசுப்ரமணியம், ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவர் மலர்விழி மற்றும் பிரபல கிரைம் நாவல் எழுத்தாளர் ராஜேஷ்குமார் ஆகியோர் பங்கேற்று, குழந்தைகளின் பிஞ்சு விரல் பிடித்து, ஆண்டவனின் அருளுடன் அரிச்சுவடியை ஆரம்பித்து வைத்தனர்.
குழந்தைகள் அ... என்ற எழுத்தை உச்சரித்துக் கொண்டே எழுதியது பெற்றோரை பரவசப்படுத்தியது.
குழந்தைகளுக்கு ஸ்கூல் பேக்
காலை, 10:30 மணி வரை நடந்த இந்நிகழ்ச்சியில், 220 பெற்றோர், தங்களது இரண்டரை வயது முதல் மூன்றரை வயது குழந்தைகளுடன் பங்கேற்றனர். பங்கேற்ற குழந்தைகளுக்கு சிலேட், பென்சில், ரப்பர், கிரையான்ஸ் உள்ளிட்ட கல்வி பொருட்கள் அடங்கிய 'பேக்' இலவசமாக வழங்கப்பட்டது.
தமிழகம் முதலிடம்
கலெக்டர் கிராந்திகுமார் கூறுகையில், ''குழந்தைகள் முதல் முறையாக எழுதும் இந்த பாரம்பரியமான நிகழ்ச்சி முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழகம் எப்போதும் கல்வியில் முதலிடம் வகிக்கிறது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்று கல்வி பயணத்தை துவங்கும் அனைத்து குழந்தைகளுக்கும் வாழ்த்துக்கள்,'' என்றார்.
வளர்ச்சிக்கு வித்திடுவர்
மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறுகையில்,''தினமலர் நாளிதழ் சார்பில் விஜயதசமி நாளன்று இந்நிகழ்ச்சி நடப்பது சிறப்பு. இக்குழந்தைகள் கல்வியில் பெரியளவில் சாதித்து வெற்றி பெற வேண்டும். பெற்றோருடன் வந்து எழுத்துகளை எழுதியது மகிழ்ச்சியான விஷயம். எதிர்கால இந்தியாவின் வளர்ச்சிக்கு அடிப்படையாக இருப்பர். அனைவருக்கும் வாழ்த்துக்கள்,'' என்றார்.
முக்கியமான நிகழ்வு
ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவர் மலர்விழி கூறுகையில்,''மிகவும் சந்தோசமான தருணம். குழந்தைகளை முதல்முறையாக எழுத வைப்பது மகிழ்ச்சி. இது, அவர்களுக்கு மிக முக்கியமான நிகழ்வு. 'தினமலர்' நாளிதழின் இம்முயற்சி அளப்பரியது.'' என்றார்.
கல்வியே செல்வம்
எழுத்தாளர் ராஜேஷ்குமார் கூறுகையில்,''செல்வங்களில் மிகப்பெரிய செல்வம் கல்வி. அதை அடைய இன்றைய தினம் சிறந்த தினம். இன்று குழந்தைகளுக்கு அரிச்சுவடியை துவங்கி வைப்பது சிறந்தது. குழந்தைகள் மிகச்சிறந்த பதவிகளில் அமருவர்.
''அவர்களுக்கு தேவையான அருளை இறைவான் வழங்குவார். பெற்றோர் நல்வழியில் நடந்தால் அக்குழந்தைகள் நல்ல முறையில் வளருவர்,'' என்றார்.
ஊக்கம் அளிக்கும்
நிகழ்ச்சியில் பங்கேற்ற பெற்றோர் சிலர் கூறுகையில்,'சமுதாய வளர்ச்சிக்கு பெரிதும் பங்களிப்பு செய்யும் 'தினமலர்' நாளிதழ் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடத்துவது பெரிதும் வரவேற்கத்தக்கது.
'குழந்தைகள் நல்ல நிலைக்கு வருவதற்கு நடத்தப்படும் மங்களகரமான இந்நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள். குழந்தைகளுக்கு இது ஊக்கம் அளிக்கும் நிகழ்வு,' என்றனர்.