/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கொடுங்கரை பள்ளத்தில் பாலம்; மலைக்கிராம மக்களுக்கு விடிவு பிறக்குமா!
/
கொடுங்கரை பள்ளத்தில் பாலம்; மலைக்கிராம மக்களுக்கு விடிவு பிறக்குமா!
கொடுங்கரை பள்ளத்தில் பாலம்; மலைக்கிராம மக்களுக்கு விடிவு பிறக்குமா!
கொடுங்கரை பள்ளத்தில் பாலம்; மலைக்கிராம மக்களுக்கு விடிவு பிறக்குமா!
ADDED : ஆக 18, 2025 09:23 PM

மேட்டுப்பாளையம்; கோபானாரி கொடுங்கரை பள்ளத்தில் பாலம் அமைத்தால், மலைக்கிராம மக்கள் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். தமிழக-கேரள அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோபனாரியில் உள்ள இருமாநில எல்லை இடையே, கொடுங்கரை பள்ளத்தில் மேம்பாலம் இல்லாததால் தண்ணீரில் வாகனங்கள் செல்கின்றன. மக்களும் நடந்து செல்கின்றனர். மழை காலங்களில் தண்ணீர் அதிகரிக்கும் போது 30 கி.மீ. சுற்றி செல்ல வேண்டியுள்ளது.
காரமடையை அடுத்த தோலம்பாளையம் அருகே கோபனாரி மலை கிராமம் உள்ளது. தமிழக - கேரள எல்லை அருகே உள்ள இந்த கிராமத்தைச் சுற்றி பட்டிசாலை, சீங்குலி, ஆலங்கண்டி, ஆலங்கண்டிபுதுார், காலனிபுதுார், செங்குட்டை, மூனுகுட்டை உள்ளிட்ட மலை கிராமங்கள் உள்ளன. இவற்றில் 1,000க்கும் மேற்பட்ட பழங்குடியினர் குடும்பங்கள் வசிக்கின்றன. கேரள மாநிலத்தைச் சேர்ந்த மன்னார்காடு, கோட்டத்துறை, அட்டப்பாடி, முக்காலி, மட்டத்துகாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் கோபனாரி அருகில் வசித்து வருகின்றனர்.
மேட்டுப்பாளையம் பகுதியிலிருந்து தினமும் காய்கறிகள், வாழை தார்கள் கோபனாரி எல்லை வழியாக கேரள மாநிலத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.
கோபனாரி மற்றும் கேரள பகுதியான மட்டத்துகாடு நடுவில் கொடுங்கரை பள்ளம் உள்ளது. இந்த பள்ளம் தான் இரு மாநில எல்லைகளையும் இணைக்கிறது. அனைத்து நாட்களிலும் இதில் தண்ணீர் செல்கிறது. இந்த பள்ளத்தில் மேம்பாலம் இல்லை. இரு மாநில மக்களும், வியாபாரிகளும், இப்பள்ளத்தை ஆபத்தான முறையில் வாகனங்கள் வாயிலாகவும், நடந்தும் கடக்கின்றனர். மழைகாலங்களில் தண்ணீர் வரத்து அதிகரிக்கும் போது பல மணி நேரம் காத்திருந்து தண்ணீர் குறைந்ததும் செல்கின்றனர்.
இதுகுறித்து மலைக்கிராம மக்கள் கூறுகையில், ''கோபனாரி மற்றும் அதனை சுற்றியுள்ள தமிழக மலைக்கிராமங்கள், அருகில் உள்ள கேரள மலைக்கிராமமான கோட்டத்துறைக்கு சென்று தான் காய்கறிகள், இதர பொருட்களை வாங்கி வர வேண்டி உள்ளது. மழைக்காலங்களில் இப்பள்ளத்தில் நீர் வரத்து அதிகமாகி விடுவதால், போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது. 30 கி.மீ. சுற்றி ஆனைகட்டி வழியாக செல்ல வேண்டும். இதனால் மழை காலங்களில் அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்யமுடியாமல் அவதி அடைகின்றோம். வேலைக்காக மன்னார்காடு, சோழியூர் செல்லும் மக்கள் மழைக்காலங்களில் வேலை வாய்ப்பை இழக்கின்றனர். இந்த பகுதியில் மேம்பாலம் அமைத்து தர இருமாநில அரசுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றனர்.