/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குழாய் உடைந்து ரோட்டில் வெள்ளமாக ஓடிய குடிநீர்
/
குழாய் உடைந்து ரோட்டில் வெள்ளமாக ஓடிய குடிநீர்
ADDED : ஜூன் 27, 2025 09:59 PM

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு பேரூராட்சி வணிக வளாகம் முன்பாக, குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வெள்ளமாக ஓடியது.
கோவை, குறிச்சி -- குனியமுத்தூர் பகுதிகளுக்கு குடிநீர் செல்லும் கூட்டு குடிநீர் திட்ட குழாய் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு வழியாக செல்கிறது. இந்நிலையில் நேற்று, கிணத்துக்கடவு பேரூராட்சி, வணிக வளாகம் முன்பாக குழாயில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் வெள்ளமாக ஓடியது. இதில், லட்சக்கணக்கான லிட்டர் அளவில் குடிநீர் வீணானது.
மேலும், வணிக வளாகத்தில் இருந்த மக்கள் வெளியே செல்ல முடியாமலும், சர்வீஸ் ரோட்டோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை எடுக்க முடியாமலும் அவதிப்பட்டனர்.
கிணத்துக்கடவு பஸ் ஸ்டாண்டு வரை குடிநீர் சென்றதால், வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டு போக்குவரத்து பாதித்தது. இதனால், போலீஸ் ஸ்டேஷன், சார் பதிவாளர் அலுவலகம், பேங்க், அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல மக்கள் சிரமப்பட்டனர்.
குடிநீர் மற்றும் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து, குடிநீர் வெளியேற்றம் நிறுத்தப்பட்டது.
மக்கள் கூறியதாவது:
கிணத்துக்கடவு சர்வீஸ் ரோட்டில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது. போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள கடைகள், சார்பதிவாளர் அலுவலகம் முன்பாக உள்ள ரோடு, பேரூராட்சி வணிக வளாகம் உள்ளிட்ட இடங்களில் அடிக்கடி குழாய் உடைப்பு ஏற்படுகிறது.
இதை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு சரி செய்தாலும், மீண்டும் உடைகிறது. எனவே, மக்கள் நலன் கருதி குழாய் உடைப்புக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.