/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆரோக்கியம் காக்கும் உணவு முறை அவசியம்!
/
ஆரோக்கியம் காக்கும் உணவு முறை அவசியம்!
ADDED : அக் 03, 2024 08:16 PM

வளரும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவுகள் உடல்ரீதியாக செயல்படவும், மூளை செயல்பாட்டிற்கும் முக்கியமானவை. உடலும் மனமும் சமநிலையில் வைத்துக்கொள்ள ஊட்டச்சத்துள்ள உணவுமுறை இன்றியமையாதது.
காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் சரியான நேரத்தில் உணவு உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். குழந்தைகள் அதிக அளவு இனிப்புகள், குளிர்பானங்கள், சர்க்கரை சேர்க்கப்பட்ட தின்பண்டங்கள், சிப்ஸ் அல்லது மிட்டாய்கள், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை உட்கொள்வதை ஊக்கப்படுத்த வேண்டாம். அவசர அவசரமாக உணவை உண்ணாமல் நிதானமாகவும், நன்றாகவும் மென்று தின்ன வேண்டும். அளவாக உண்ண வேண்டும். காலை உணவை தவிர்க்க வேண்டாம்.
ஆரோக்கிய உணவு
காய்கறி, பழங்கள், சிறுதானியங்கள், ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த உணவுகளை சேர்த்துக் கொள்ளவேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் குடிப்பதை பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். அந்தந்த பருவங்களில் கிடைக்கும் காய்கறி மற்றும் பழங்களை உட்கொண்டாலே, குழந்தைகளுக்கு தேவையான சத்துக்கள் கிடைத்துவிடும்; இதற்கென மெனக்கெட தேவையில்லை.
சமச்சீர் உணவு
சமச்சீர் உணவு என்பது பலவகையான உணவுகளின் கலவையாகும். சீரான உணவு குழந்தைகளின் உடல் திறம்பட செயல்பட தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. சமச்சீர் ஊட்டச்சத்து இல்லையென்றால் உடலானது நோய், தொற்று, சோர்வு மற்றும் குறைந்த செயல்திறன் ஆகியவற்றிற்கு உட்பட நேரிடும். போதுமான ஆரோக்கியமான உணவுகளைப் பெறாத குழந்தைகள் வளர்ச்சியில் பிரச்னை, மோசமான கல்வி செயல்திறன் மற்றும் அடிக்கடி தொற்றுநோய்களை சந்திக்க நேரிடும். அதனால் பள்ளி செல்லும் குழந்தைகள் புரதம், வைட்டமின்கள், கால்சியம், தாதுக்கள், நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவை தினமும் உட்கொள்வது அவசியம்.
சிறு வயது உடல் பருமன்
உலகில் பெரும்பாலான குழந்தைகள் சந்திக்கும் பிரச்சனை உடல் பருமன். மரபியல் காரணிகள், உணவின் அளவு, பெற்றோரின் கவனிப்பு, உடல் உழைப்பு, உடற்பயிற்சி இல்லாமை, பொருளாதாரம் உள்ளிட்ட காரணங்களால் குழந்தைகளுக்கு உடல் பருமன் ஏற்படுகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர். உயரத்திற்கு ஏற்ப உடல் எடை இருக்க வேண்டும். உயரத்தைவிட உடலின் எடை அதிகமாக இருந்தால் அதுவே 'ஒபிசிட்டி' எனப்படுகிறது.
சிறு குழந்தைகளாக இருந்தபோது மேற்கொண்ட உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் வளர்ந்த பிறகு தொடர்வதில்லை. இன்றைய காலகட்டத்தில் உள்ள குழந்தைகள் தொலைக்காட்சி, மொபைல், வீடியோ கேம்ஸ் என வீட்டிற்குள்ளேயே அடைந்து இருப்பதும், உடல்பருமனுக்கு காரணமாக அமைகிறது.
அதிகரிக்கும் உடற்பருமனானது, அவர்களுடைய மேற்படிப்பு, பணி, என்று எதிர்காலத்திலும் அவர்களுக்கு பிரச்னைகளைக் கொடுக்கும். அதுமட்டுமல்லாமல் இதர உடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் வர வாய்ப்பு உள்ளது.
எவ்வாறு தடுப்பது?
குழந்தைகளின் உடல் எடை அதிகமாகிறது என்று தெரிந்தால் முறையான உணவுப் பழக்கம், சரியான நேரத்தில் உண்பது, உள்ளிட்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். உடற்பயிற்சி செய்தல், தன் வயது பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாடுதல் ஆகியவற்றை பெற்றோர்கள் ஊக்கப்படுத்த வேண்டும். உடல் எடையைக் குறைப்பதற்கு மருத்துவச் சிகிச்சை மட்டுமே ஒரே தீர்வு என்றெண்ணி, முறையற்ற மருத்துவம் மற்றும் போலி மருத்துவம் போன்றவற்றை கண்மூடித்தனமாகப் பின்பற்றுவது தவிர்க்கப்படவேண்டும். ஆரோக்கியமான மற்றும் சமச்சீரான உணவு முறையே இதற்கான தீர்வு என்பதை மறக்கக் கூடாது.