/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விபத்துகளுக்கு வித்திடும் ஒரு வழிப்பாதை பயணம்
/
விபத்துகளுக்கு வித்திடும் ஒரு வழிப்பாதை பயணம்
ADDED : அக் 07, 2025 11:22 PM

கோவை; கோவையில் ஒரு வழிப்பாதையில் வாகனங்களை இயக்குபவர்களால் ஏற்படும் விபத்துகளை தவிர்க்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவை மாநகரின் சாலைகளில், போக்குவரத்து நெருக்கடி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. போக்கு வரத்து நெரிசலில் சிக்காமல் இருக்க, பலரும் குறுக்கு வழிகளை கையாள்கின்றனர். குறிப்பாக, ஒரு வழிப்பாதையில் செல்வோரால், விபத்துகள் அதிகரித்து வருகின்றன.
பார்க் கேட், நஞ்சப்பா ரோடு, வின்சென்ட் ரோடு, கிராஸ்கட் ரோடு, 100 அடி ரோடு ஒப்பணக்கார வீதி உள்ளிட்ட பிரதான ரோடுகளிலும் வாகன ஓட்டிகள் ஒரு வழிப்பாதையில் செல்லும் நிகழ்வுகள் தினமும் நடக்கின்றன.
சாதாரண வாகனங்கள் ஒருவழிப்பாதையில் செல்வதை ஏற்க முடியாத நிலையில், பஸ் அவ்வாறு செல்வதை நினைத்தாலே பகீர் என்கிறது. மேட்டுப்பாளையம் ரோட்டில், ஒரு வழிப்பாதையில் பயணித்த தனியார் பஸ்கள் குறித்த வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதற்கு போக்குவரத்து போலீசார் எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தகவல் வெளியாகவில்லை.
விபத்தில்லா கோவையை உருவாக்க பாடுபட்டு வரும் மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் இதுபோன்ற விதிமீறல்கள் இனியும் தொடராமல் இருக்க, கண்காணிப்பை பலப்படுத்தி, நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும்.