/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையின் தாவர அடையாளம் 'நறு விழி' மீட்டெடுத்த தன்னார்வ அமைப்பு
/
கோவையின் தாவர அடையாளம் 'நறு விழி' மீட்டெடுத்த தன்னார்வ அமைப்பு
கோவையின் தாவர அடையாளம் 'நறு விழி' மீட்டெடுத்த தன்னார்வ அமைப்பு
கோவையின் தாவர அடையாளம் 'நறு விழி' மீட்டெடுத்த தன்னார்வ அமைப்பு
ADDED : நவ 02, 2024 11:20 PM
கோவை: கோவையின் தாவர அடையாளமான 'கோவை நறு விழி'யை அழிவின் விளிம்பில் இருந்து மீட்டெடுத்துள்ளது தன்னார்வ அமைப்பான கியூப்.
'கோவை நறுவிழி' என்பது செடி வகைத் தாவரம். இதன் தாவரவியல் பெயர் கார்டியா டிபியூசா. 'கோவை மஞ்சக்' எனவும் அழைக்கப்படுகிறது. ஓரிட வாழ்வியான இது, உலகில் கோவை தவிர வேறு எங்கும் காணப்படாத தாவரமாகும்.
கடந்த 1938ல் தாவரவியலாளர் கே.சி.ஜேக்கப், கோவை நறுவிழியை முதன்முதலில் அடையாளம் கண்டறிந்து, அது கோவையில் மட்டும் பிரத்யேகமாக வளரும் தாவரம் என்பதை அறிவித்தார். அதன்பின், அவ்வப்போது, இச்செடி அடையாளம் காணப்பட்டாலும், 10க்கும் குறைவான எண்ணிக்கையில்தான் இருந்தன.
இந்நிலையில், கோவை நறுவிழியை, நாற்றாங்கால் அமைத்து, 3,500 செடிகளை உருவாக்கி, அதனை மீட்டெடுத்துள்ளது கியூப் தன்னார்வ அமைப்பு.
இதுதொடர்பாக, அந்த அமைப்பின் தன்னார்வலர்கள் வின்னிபீட்டர், வருண் ஆகியோர் நம்மிடம் கூறியதாவது:
1938ல் முதன்முதலில் அடையாளம் காணப்பட்டது. 2018ல் நடத்திய ஆய்வில் 10 செடிகளே இருந்தன. நகரமயமாதல், பாதைகள் விரிவாக்கத்தின்போது இவை அழிந்துவிட்டன. 2018ல் வனத்துறை, இந்திய வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனம் ஆகியவற்றின் உதவியோடு 1600 ச.கி.மீ., பகுதியில் ஆய்வு நடத்தியதில் 100க்கும் குறைவானசெடிகள் கண்டறியப்பட்டன.
இதன் பழங்களைச் சேகரித்து, 9 விதமான முறைகளில் நாற்றுகளை வளர வைக்க முயற்சி செய்தோம். இதில் ஒரு முறை பலனளித்தது. தற்போது, 3500 செடிகளை உருவாக்கியுள்ளோம்.
இச்செடி 3 மீட்டர் வரை வளரும். சொரசொரப்பான தன்மை கொண்டது. அதிக தண்ணீர் தேவையில்லை. மஞ்சள் நிற பழமும், வெளிறிய இளஞ்சிவப்பு பூக்களையும் கொண்டது. ஒரு விதையில் ஒன்றுக்கும் மேற்பட்ட செடிகள் முளைக்கும் தன்மை கொண்டது.
இச்செடியை மீண்டும் இயல்பான சூழலில் பரவச் செய்ய, வனத்துறை உதவியுடன் மதுக்கரை பகுதியில் 2.2 ஹெக்டர் பரப்பில் 'கோவை நறு விழி பூங்கா' அமைக்க உள்ளோம்.
இச்செடியின் மருத்துவ குணங்கள், பண்புகள் குறித்து இன்னும் ஆராயப்பட வேண்டியுள்ளது. ஒரு செடியின் முழுப்பண்புகளை அறிய 10 முதல் 20 ஆண்டுகள் தேவைப்படும். வெளிநாட்டு பல்கலை, ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இணைந்து ஆய்வு நடத்தவுள்ளோம். மக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், உயிர்வேலிகள் உள்ளிட்ட பகுதிகளில் இவற்றை வளர்க்க முயற்சி செய்கிறோம்.
கோவையில் மட்டும்தான் இச்செடிகளைக் காணமுடியும் என்பதால், இதனை நமது தாவர அடையாளம் என்றே சொல்லலாம். இதுபோன்ற தாவரங்களைக் காப்பது நமது கடமை.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
பெரு முயற்சியால் அழிவின் விளிம்பில் உள்ள ஒரு தாவர இனத்தை மீட்டெடுக்கும் முயற்சி பாராட்டுக்குரியது.