/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எலிவேஷன் டைல்ஸ்களுக்கு மாற்றாக 'ஏ.பி.சி. சீட்' அழகாகவும் பிரம்மாண்டமாகவும் காட்சி அளிக்கும்
/
எலிவேஷன் டைல்ஸ்களுக்கு மாற்றாக 'ஏ.பி.சி. சீட்' அழகாகவும் பிரம்மாண்டமாகவும் காட்சி அளிக்கும்
எலிவேஷன் டைல்ஸ்களுக்கு மாற்றாக 'ஏ.பி.சி. சீட்' அழகாகவும் பிரம்மாண்டமாகவும் காட்சி அளிக்கும்
எலிவேஷன் டைல்ஸ்களுக்கு மாற்றாக 'ஏ.பி.சி. சீட்' அழகாகவும் பிரம்மாண்டமாகவும் காட்சி அளிக்கும்
ADDED : செப் 05, 2025 10:06 PM

எங்கள் வீடு கட்டி, ஐந்து ஆண்டுகளாகின்றன. முகப்புக்கு பயன்படுத்திய 'லேசர் கட்டிங் டிசைன் கிரில்' மற்றும் கேட்டுகள் துருப்பிடிக்க ஆரம்பித்து விட்டன. இவ்வளவு விரைவாக துருப்பிடிக்க என்ன காரணம்; அதற்கு என்ன செய்வது?
-தண்டபாணி, சுந்தராபுரம்.
பொதுவாக இரும்பினால் செய்யப்படும் பொருட்கள் எளிதில் துருப்பிடிக்கும். அழகுக்காக பயன்படுத்தப்படும் சி.எம்.சி., கட்டிங் மற்றும் கேட்டுகள் எளிதில் துருப்பிடிக்காத உலோகங்களால் உருவாக்குவது மிக நல்லது. இரும்பினால் செய்யும்போது, அதனை சரியான முறையில் பாதுகாத்துக் கொள்ள மின் முலாம் பூசுதல், பவுடர் கோட்டிங் மற்றும் ஆன்டி கரோசிவ் பிரைமர் கொண்டு, வர்ணம் பூசி இரும்பினால் செய்த பொருட்களை அதிக காலம் பாதுகாத்துக் கொள்ளலாம்.
நாங்கள் கட்டி வரும் வீட்டில் உள்ள பில்லர் கம்பிகள் நிறம் கருப்பாக மாறி வருகிறது. சில கம்பிகளை சுற்றி பூஞ்சை பூத்ததுபோல் இருக்கிறது. இதற்கு காரணம் என்ன; எப்படி சரி செய்வது?
-உமாபதி, கணபதி.
கட்டடத்தில் வெளிப்புறமாக உள்ள கம்பிகளை, சரியான முறையில் பாதுகாத்துக் கொள்வது மிகவும் அவசியம். சில ஆண்டுகளுக்குப் பின், கட்டடம் கட்ட இவ்வகையான கம்பிகளை வெளிப்புறத்தில் நீட்டிக்கவேண்டியுள்ளது. அவ்வாறு நீட்டித்து வைத்திருக்கும் கம்பிகளை, ஆன்டி கரோசிவ் பெயின்ட் பூசி, சரியான முறையில் கம்பியில் சுற்றுப்புற சூழலோடு தொடர்பு இல்லாதவாறு செய்து கொள்வது அவசியம்.
வீட்டில் தளம் போடும்பொழுது, சுருக்கி தளம் போடுவது சிறந்ததா? அல்லது 'சிப்ஸ் கான்கிரீட்' என்று சொல்லக்கூடிய கான்கிரீட் தளம் போடுவது சிறந்ததா?
-ராமச்சந்திரன், பல்லடம்.
வீட்டின் மொட்டை மாடியில் சுருக்கி தளம் அமைப்பது என்பது செங்கல் மற்றும் சுண்ணாம்பு கலந்த கலவையால் அமைப்பதாகும். அவ்வாறு அமைக்கும்பொழுது வெப்பம் காரணமாக, மேலே இருக்கும் சிமென்ட் தளத்தில் விரிசல் வர நிறைய வாய்ப்புள்ளது. அந்த விரிசல்களின் வாயிலாக நீர்க்கசிவு ஏற்பட்டு, கீழே உள்ள கான்கிரீட் தளத்தை பாதிக்க அதிக வாய்ப்புள்ளது.
ஆகவே, சிப்ஸ் கான்கிரீட் வாயிலாக, சிறந்த முறையில் 'வாட்டர் புரூப்பிங்' செய்து, அதன் மேல் தளம் அமைப்பது சிறந்த தேர்வாகும்.
நாங்கள் ஒரு புது வீடு கட்டியுள்ளோம். சோலார் பேனல் அமைக்கலாமா. அரசு மானியம் கிடைக்குமா?
-சபரிநாதன், இருகூர்.
தாராளமாக அமைத்துக் கொள்ளலாம். பெரும்பாலான வீடுகளில் சோலார் வாட்டர் ஹீட்டர் அமைத்து மின்சாரத்தை சேமித்து வருகின்றனர். வீட்டில் உபயோகிக்கும் அனைத்து மின் உபகரணங்களுக்கு தேவைப்படும் மின்சாரத்தை, சோலார் பேனல் அமைத்து சூரிய ஒளி வாயிலாக உற்பத்தி செய்து, மின் கட்டணத்தை மிச்சப்படுத்துவதுடன், சுற்றுச்சூழலையும் பாதுகாக்கலாம். இதற்கு ஆரம்ப முதலீடு சற்று அதிகமாக இருக்கும் காரணத்தால், பொதுமக்கள் தயங்குகின்றனர். தற்போது மத்திய அரசு மானியம் வழங்குகிறது. எனவே, வீடுகளில் தாராளமாக சோலார் பேனல் பொருத்திக் கொள்ளலாம்.
வீட்டு முன்புற எலிவேஷன் டைல்ஸ்க்கு மாற்றுப் பொருளாக என்னென்ன உபயோகிக்கலாம்?
-அருண்குமார்,
கோவில்பாளையம்.
வீட்டின் முன்புறத்தை அழகுப்படுத்த தற்போது பல டிசைன்களில் எலிவேஷன் டைல்ஸ்கள் வந்துள்ளன. அதை தாராளமாக உபயோகப்படுத்தலாம். அதற்கு மாற்றாக, நமக்கு விருப்பப்பட்ட வண்ணத்தில், பல டிசைன்களில் பெயின்ட் அடித்துக் கொள்ளலாம். மேலும் , 'ஏ.சி.பி., சீட்' எனப்படும் அலுமினியம் காம்போசிட் பேனல் பொருத்தி, வீட்டின் முன்புறத்தை அழகாகவும், பிரம்மாண்டமாகவும் காட்டலாம். இது, பெரும்பாலும் வணிக வளாகங்களில் பொருத்தப்படுகிறது. தற்போது வீடுகளின் முன்புறமும் பொருத்தும் நடைமுறை பிரபலமாகி வருகிறது. இதுவும் பல வண்ணங்களிலும், பல டிசைன்களிலும் கிடைக்கிறது.
-ராமலிங்கம்,
துணை தலைவர்,
கோயம்புத்துார் மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர் சங்கம்(காட்சியா)