/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முகப்பு விளக்கில் இல்லை கருப்பு ஸ்டிக்கர் கண்களை கூசச் செய்வதால் இரவில் விபத்து
/
முகப்பு விளக்கில் இல்லை கருப்பு ஸ்டிக்கர் கண்களை கூசச் செய்வதால் இரவில் விபத்து
முகப்பு விளக்கில் இல்லை கருப்பு ஸ்டிக்கர் கண்களை கூசச் செய்வதால் இரவில் விபத்து
முகப்பு விளக்கில் இல்லை கருப்பு ஸ்டிக்கர் கண்களை கூசச் செய்வதால் இரவில் விபத்து
ADDED : அக் 02, 2025 11:48 PM

கோவை;கோவையில் வாகனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. போக்குவரத்து விதிமீறல்களால் விபத்துகளும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் பெருகி வருகின்றன.
மாநில அளவில் சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகள் எண்ணிக்கையில் கோவை முதலிடத்தில் இருப்பது, வாகன ஓட்டிகளின் கவனச்சிதறல் ஏற்படுவதும் காரணம்.
ஏனெனில், கோவையில் பெரும்பாலான பைக்குகள், கார், கனரக வாகனங்கள் முகப்பு விளக்கில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்படாமல் இயக்கப்படுகின்றன. தற்போது சந்தைக்கு வந்துள்ள நவீன ரக எல்.இ.டி., பல்புகளை, விதிகளை மீறி கூடுதலாக பொருத்துவதால், எதிரில் வரும் வாகன ஓட்டிகளுக்கு கண்களை கூசச் செய்யும் அளவுகள் ஒளி உமிழ்வதால் விபத்துக்கள் அதிகரிக்கின்றன.
இரவு நேரங்களில் வாகனங்கள் ஓட்டுவோர் எதிரே வரும் வாகனங்களில் கண் கூசும் விளக்குகளின் ஒளியால் திணறுகின்றனர். பைக்குகள் முதல் அனைத்து விதமான வாகனங்களிலும் நவீன ரக பவர் புல் பல்புகள், எல்.இ.டி., பல்புகள் பயன்படுத்தப்படுகின்றன.
இரவில் எதிரில் வருவது பைக்கா அல்லது நான்கு சக்கர வாகனமா என தெரியாத அளவுக்கு முகப்பு விளக்குகள் அதிக பிரகாசமாக ஒளிர்கின்றன.
இதை கட்டுப்படுத்தும் விதமாக, முகப்பு விளக்குகளின் நடுவில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டுவது அவசியம்.
தற்போது பெரும்பாலான வாகனங்களில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டும் நடவடிக்கை அறவே இல்லை. வாகன ஓட்டிகளும் அதன் அவசியத்தை உணராமல் இருக்கின்றனர். இரவு நேரங்களில் வாகன விளக்குகளை டிம், பிரைட் செய்வதும் கிடையாது. இதுகுறித்த விழிப்புணர்வு நடவடிக்கையை போக்குவரத்து போலீசார், தன்னார்வலர்கள் மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
'விபத்தில்லா கோவை'யை உருவாக்க, மாவட்ட நிர்வாகம், மாநகர காவல்துறை மற்றும் 'உயிர்' அமைப்பு இணைந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன.
வாகனங்களின் முகப்பு விளக்குகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்ட வேண்டியது கட்டாயம் என்பதை வாகன ஓட்டிகளுக்கு தெரிவித்து, செயல்படுத்தினால், கண் கூசும் ஒளியால் வாகன ஓட்டிகள் திணறுவதையும், விபத்துகளையும் தவிர்க்கலாம்.