/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு குடியிருப்பு
/
மாற்றுத்திறனாளிகளுக்கு குடியிருப்பு
ADDED : மார் 05, 2024 01:13 AM

கோவை;கோவை மாவட்ட நிர்வாகத்தின் முயற்சியால், ஓராட்டுக்குப்பையில், 86 மாற்றுத்திறனாளிகளுக்கு எளிய அணுகுமுறையுடன் கூடிய வீடுகள், ஜி.டி.நாயுடு அறக்கட்டளை பங்களிப்புடன் கட்டப்படுகின்றன.
கோவை மாவட்டம், செட்டிபாளையம் பேரூராட்சியில், 116 மாற்றுத்திறனாளிகளுக்கு, வீடு கட்டுவதற்கு, 2 சென்ட் நிலம் இலவசமாக மாவட்ட நிர்வாகம் வழங்கியது. வீடு கட்டுவதற்கு நிதி வழங்கக்கோரி, கிராம சபையில் அவர்கள் மனு கொடுத்தனர்.
அனைவருக்கும் வீடு திட்டத்தில் தலா ரூ.2.10 லட்சம் மானியம் வழங்க அனுமதி அளிக்கப்பட்டது. இவர்களது பொருளாதார சூழல், இயலாமை காரணமாகவும், மானியத் தொகையை கொண்டு வீடு கட்ட முடியாததாலும், நிதி திரட்ட உதவுமாறு, கலெக்டர் கிராந்திகுமாரை அணுகினர். இதையடுத்து, கலெக்டரின் முயற்சியால், ஜி.டி.நாயுடு அறக்கட்டளை நிதி வழங்க முன்வந்தது.
இதையடுத்து, செட்டிபாளையம் ஊராட்சி ஓராட்டுக்குப்பையில், 86 மாற்றுத்திறனாளிகளுக்கு எளிய அணுகுமுறையுடன் குடியிருப்பு கட்டுவதற்கான பூமி பூஜை நடத்தப்பட்டது. ஜி.டி.நாயுடு அறக்கட்டளை அறங்காவலர்கள் ராஜ்குமார், அகிலா முன்னிலை வகித்தனர்.
கலெக்டர் கிராந்திகுமார் துவக்கி வைத்து பேசியதாவது: ஓராட்டுகுப்பையில், 116 மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில், 86 வீடுகள் ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. கட்டப்பட உள்ள ஒவ்வொரு வீடுகளின் உத்தேச பரப்பு, 300 சதுரடி. 101 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, முதல்கட்டமாக, 86 பயனாளிகளுக்கு வீடு கட்டப்படுகிறது.
ஹால், சமையலறை, படுக்கையறை, கழிவறை வசதி இருக்கும். ஒவ்வொரு வீட்டுக்கும் அரசு மானியம் ரூ.2.10 லட்சத்துடன், ரூ.4.40 லட்சம் தனியார் பங்களிப்புடன் கட்டப்படும்.
இத்தொகை, ஜி.டி.நாயுடு அறக்கட்டளை மூலம் வழங்கப்பட்டிருக்கிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு டவுன்ஷிப் மாதிரி வீடு கட்டப்பட உள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற வகையில், எளிய அணுகுமுறையுடன் கட்டப்படும். பேரூராட்சி சார்பில் சாலை, குடிநீர் வசதி செய்யப்படும்.
தமிழகத்தில் முதன்முறையாக, கோவை மாவட் டத்தில் இதுபோன்ற வீடுகள் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டப்பட உள்ளன.
பேரூராட்சிகள் துறை, மாற்றுத்திறனாளிகள் துறை, வருவாய்த்துறை இணைந்து செயல்படும். இவ்வீடுகள் விரைந்து கட்டி முடிக்கப்படும். இவ்வாறு, கலெக்டர் பேசினார்.
விழாவில், பேரூராட்சி தலைவர் ரங்கசாமி, துணை தலைவர் கனகராஜ், திட்ட இயக்குனர் அஞ்சன குமார், விமான நிலைய ஆலோசனை குழு உறுப்பினர் ராஜேந்திரன், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மணிகண்டன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெகதீசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

