/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குளம் அருகே கழிவுகள் குவிப்பு: ஊராட்சி சார்பில் போலீசில் புகார்
/
குளம் அருகே கழிவுகள் குவிப்பு: ஊராட்சி சார்பில் போலீசில் புகார்
குளம் அருகே கழிவுகள் குவிப்பு: ஊராட்சி சார்பில் போலீசில் புகார்
குளம் அருகே கழிவுகள் குவிப்பு: ஊராட்சி சார்பில் போலீசில் புகார்
ADDED : செப் 19, 2024 10:06 PM

பொள்ளாச்சி: 'பணிக்கம்பட்டி குளம் அருகே கழிவுகளை கொண்டு வந்து கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, ஊராட்சி நிர்வாகம், மகாலிங்கபுரம் போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளது.
பொள்ளாச்சி அருகே, பணிக்கம்பட்டி (கிட்டசூராம்பாளையம்) ஊராட்சியில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் குளம் உள்ளது. டி.கோட்டாம்பட்டி - பணிக்கம்பட்டி செல்லும் ரோட்டில் உள்ள இந்த குளத்தில், மழைநீர் தேங்கி நிற்பதுடன், ஓடை வழியாக மற்ற பகுதிகளுக்கும் செல்கிறது.
இந்த குளம் மற்றும் குளத்தையொட்டிய பகுதிகளில் அடிக்கடி கழிவுகளை கொட்டுவதால் கடும் துர்நாற்றம் வீசியது. ஊராட்சி நிர்வாகம் சார்பில் குளத்தை துார்வாரியதுடன், அதன் அருகே உள்ள பகுதியையும் சுத்தப்படுத்தி குப்பை கொட்ட கூடாது என அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது.
ஆனால், அறிவிப்பையும் மீறி பலர் குப்பையை கொட்டுவதால் சுகாதாரச்சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வாகனத்தில் வந்து கழிவுகளை, குளத்தில் கொட்டி செல்வதாக ஊராட்சி தலைவர் முத்துசாமி, மகாலிங்கபுரம் போலீசாரிடம் புகார் மனு அளித்தார். புகாரை பெற்ற போலீசார், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
மனுவில் கூறியிருப்பதாவது: பணிக்கம்பட்டி குளத்தில் அடிக்கடி உணவு கழிவுகள், உபயோகமற்ற பொருட்களை வாகனங்களில் வந்து கொட்டுகின்றனர். பல நேரங்களில் ஊராட்சி சார்பிலும், குடியிருப்போர் வாயிலாகவும் குப்பை கொட்டுவதை தடுத்து நிறுத்தப்பட்டது. கடந்த, 15ம் தேதி வாகனத்தில் வந்து உணவு கழிவுகளை கொட்டி சென்றனர். பொதுமக்கள், இவ்வழியாக சென்று வர சிரமமாக உள்ளது. தொற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. உணவு கழிவுகளை கொட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலீசார் கூறுகையில், 'விசாரணையில், நகராட்சி வாகனத்தில் கொண்டு வந்து, குளம் அருகே கழிவு கொட்டியது தெரியவந்துள்ளது. அங்குள்ள கண்காணிப்பு கேமராவிலும் இந்த காட்சிகள் பதிவாகியுள்ளது. தொடர் கண்காணிப்பு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.