/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தண்டுமாரியம்மன் கோவிலில் அக்னிச்சாட்டு; பக்தர்கள் மஞ்சள்நீர் ஊற்றி வழிபாடு
/
தண்டுமாரியம்மன் கோவிலில் அக்னிச்சாட்டு; பக்தர்கள் மஞ்சள்நீர் ஊற்றி வழிபாடு
தண்டுமாரியம்மன் கோவிலில் அக்னிச்சாட்டு; பக்தர்கள் மஞ்சள்நீர் ஊற்றி வழிபாடு
தண்டுமாரியம்மன் கோவிலில் அக்னிச்சாட்டு; பக்தர்கள் மஞ்சள்நீர் ஊற்றி வழிபாடு
ADDED : ஏப் 17, 2025 11:49 PM

கோவை; கோவை அவிநாசி சாலை தண்டுமாரியம்மன் கோவிலில் சித்திரைத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அக்னிச்சாட்டு பக்தர்கள் சூழ நேற்று கோலாகலமாக நடந்தது.
சித்திரைத்திருவிழா ஏப்.,14ல் முகூர்த்தகால் நடுதல், சிறப்பு அபிஷேகத்துடன் துவங்கியது. ஏப்.,15ல் காலை 6:30 மணியிலிருந்து 7:30க்குள் கொடியேற்றமும், மாலை 6:30 மணிக்கு பூச்சாட்டும் நடந்தது.
நேற்று மாலை, 6:30 மணிக்கு அக்னிச்சாட்டு நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளையடுத்து கருவறையில் வைத்து பூஜிக்கப்பட்ட அக்னிச்சட்டியை ஓம்சக்தி பராசக்தி கோஷங்களோடு சிவாச்சாரியார்கள் கோவில் முன் நடப்பட்ட கம்பத்தில் எழுந்தருளுவித்தனர்.
அதற்கு மாலை அணிவித்தும், உப்பு, மிளகு சமர்பித்தும், குடங்களில் பூஜிக்கப்பட்ட மஞ்சள்நீர் ஊற்றியும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகளை பக்தர்கள் மேற்கொண்டனர். திரளான பக்தர்கள் அம்மனை தரிசித்தனர்.
இன்று மாலை, 6:30 மணிக்கு கோவில் வளாகத்தில் திருவிளக்கு வழிபாடும், வெள்ளி சிம்ம வாகனத்தில் அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நாளை இரவு, 8:00 மணிக்கு அம்மன் குதிரை வாகனத்திலும், ஏப்.,20 அன்று இரவு, 8:00 மணிக்கு சிம்ம வாகனத்தில் அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
விழா நாட்களில் அன்றாடம் காலை, 7:00 மணிக்கு அபிஷேக பூஜைகளும், மாலை, 4:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடக்கிறது. காலை, மாலை இரு வேளைகளிலும் யாக சாலை பூஜைகள் நடக்கிறது.
அன்றாடம் அன்னதானம் வழங்க, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருவிழா ஏற்பாடுகளை, கோவில் செயல் அலுவலர் பேபிஷாலினி, அறங்காவலர் குழு தலைவர் நாகலட்சுமி உள்ளிட்ட அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.