/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குளங்களில் கழிவு நீர் கலப்பதை தடுக்க சிறப்பு திட்டம் தேவை: விவசாய சங்கங்கள் கோரிக்கை
/
குளங்களில் கழிவு நீர் கலப்பதை தடுக்க சிறப்பு திட்டம் தேவை: விவசாய சங்கங்கள் கோரிக்கை
குளங்களில் கழிவு நீர் கலப்பதை தடுக்க சிறப்பு திட்டம் தேவை: விவசாய சங்கங்கள் கோரிக்கை
குளங்களில் கழிவு நீர் கலப்பதை தடுக்க சிறப்பு திட்டம் தேவை: விவசாய சங்கங்கள் கோரிக்கை
UPDATED : ஆக 11, 2025 07:22 AM
ADDED : ஆக 10, 2025 10:43 PM

சூலுார், ; நிலத்தடி நீருக்கு ஆதாரமாக விளங்கும் குளங்கள், குட்டைகளில் கழிவு நீர் நேரடியாகவோ, மறைமுகமாகவோ கலப்பதை தடுக்க, சிறப்பு திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும், என, விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது.
சூலுார் மற்றும் சுல்தான்பேட்டை வட்டாரத்தில் உள்ள பேரூராட்சிகள், ஊராட்சிகளில் அடுத்தடுத்து குளங்கள், குட்டைகள் சங்கிலி தொடர் போல் உள்ளன. இவற்றில், பெரும்பாலான குளங்கள் பொதுப்பணித்துறையாலும், குட்டைகள் அந்தந்த ஊராட்சி நிர்வாகங்களாலும் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இதில், குளங்கள் மற்றும் தடுப்பணைகளுக்கு, நொய்யல் ஆற்று நீர், ராஜ வாய்க்கால் வழியாக வழங்கப்பட்டு வருகின்றன.
சூலுார் அடுத்த ஆச்சான் குளம், மாவட்டத்திலேயே பெரிய பரப்பு கொண்ட குளமாக உள்ளது. இக்குளம், 400 ஏக்கர் பரப்பும், சூலுார் பெரிய குளம், 100 ஏக்கரும், சின்ன குளம், 70 ஏக்கர் பரப்பளவும் கொண்டுள்ளது. கண்ணம்பாளையம், பள்ள பாளையம் குளங்கள், சுமார், 40 ஏக்கர் பரப்பில் உள்ளன. இக்குளங்களில் தேக்கப்படும் நீர், சுற்றுவட்டார பகுதிகளின் நிலத்தடி நீரின் ஆதாரமாக உள்ளது. பாசனத்தின் வாயிலாக, ஆயிரக்கணக்கான ஏக்கர் பயன்பெற்று வருகின்றன.பெரிய பரப்புள்ள முக்கிய குளங்களில் தேக்கப்படும் தண்ணீர், பல்வேறு காரணங்களால் தற்போது மாசடைந்து வருகிறது. வறட்சி அதிகமாக இருந்த கால கட்டத்தில், கழிவு நீர் குளங்களுக்கு திருப்பி விடப்பட்டது. அதன் பிறகு, அதே முறையை பின்பற்றி வருவதால், குளங்களில் கழிவு நீர் மட்டுமே தற்போது நிற்கிறது. மழை காலங்களில் நொய்யல் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடினாலும், அந்த மழை நீரை குளங்களுக்கு திருப்பி விட பொதுப்பணித் துறையினர் நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால், குளங்களில் சுத்தமான மழை நீரை கண்டு, பல ஆண்டுகள் ஆகிவிட்டது. டன் கணக்கில் கழிவுகள் தேங்கி குளங்கள் மாசடைந்துள்ளன.ஆகாயத்தாமரைகள் ஆக்கிரமித்து நீரை உறிஞ்சுகின்றன.
இதுகுறித்து விவசாய சங்கத்தை சேர்ந்தவர்கள் கூறியதாவது:
நொய்யல் ஆறு மற்றும் குளங்களில் நேரடியாகவும், மறைமுகமாகவும் கழிவு நீர் கலப்பதை தடுக்க உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதற்காக பகுதி வாரியாக தனி கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும். தன்னார்வ அமைப்புகளை ஒருங்கிணைத்து மக்களிடையே விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். நிதி ஆதாரம் இல்லை, மீன் வளர்ப்பு பாதிக்கப்படும் எனக்கூறி தட்டி கழிக்காமல், மாவட்ட நிர்வாகம் சிறப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். பல ஆண்டுகளாக இதை வலியுறுத்தி வருகிறோம். ஆனால், எவ்வித பலனும் இல்லை. நாளுக்கு நாள் குறைந்து வரும் விவசாய சாகுபடியை கருத்தில் கொண்டு சிறப்பு திட்டத்தை தீட்டி செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.