ஆ ஊ என்றால் ஆன்டிபயாடிக் முழுங்குவதால் ஆபத்து 'சூப்பர் கிருமிகள்' தாண்டவம் ஆடும் என எச்சரிக்கை!
ஆ ஊ என்றால் ஆன்டிபயாடிக் முழுங்குவதால் ஆபத்து 'சூப்பர் கிருமிகள்' தாண்டவம் ஆடும் என எச்சரிக்கை!
UPDATED : நவ 14, 2026 06:27 PM
ADDED : நவ 14, 2026 06:22 PM

கோவை: தேவையற்ற ஆன்டிபயாடிக் மருந்து உட்கொள்வதால், மருந்துகளால் கட்டுப்படுத்த முடியாத 'சூப்பர் கிருமிகள்' உருவாகி வருவதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
'வரவிருக்கும் பேராபத்து: நுண்ணுயிர் எதிர்ப்பு – நாம் தடுத்து நிறுத்த வேண்டிய ஒரு பொது சுகாதார நெருக்கடி' என்ற நுால் வெளியீட்டு விழா கே.ஜி. மருத்துவமனையில் நடந்தது.
மருத்துவமனை தலைவர் டாக்டர் பக்தவத்சலம் தலைமை வகித்தார். டாக்டர்கள் வைஷ்ணவி, நாராயண், விவேகானந்தன், சிந்து, நிகில் ஜாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அவர்கள் கூறியதாவது:
ஆன்டிபயாடிக் என்பது தலைவலிக்கு எடுத்துக்கொள்ளும் சாதாரண பாராசிட்டமால் மாத்திரை அல்ல. அது ஒட்டுமொத்த சமூகத்தின் நலனுடன் தொடர்புடைய மருந்து.
வைரஸால் ஏற்படும் சாதாரண சளி, காய்ச்சலுக்கு ஆன்டிபயாடிக் மருந்துகள் பலனளிக்காது. தேவையின்றி அவற்றை உட்கொள்வதால், கிருமிகள் மருந்துகளை எதிர்க்கும் திறனை வளர்த்துக்கொண்டு, வலிமையான 'சூப்பர் கிருமிகளாக' பெருகும்.
இவை தொடுகை உள்ளிட்ட வழிகளில் குழந்தைகள், அக்கம்பக்கத்தினர் என ஒட்டுமொத்த சமூகத்துக்கும் பரவும் அபாயம் உள்ளது. இது எதிர்கால மருத்துவ சிகிச்சைக்கு பெரும் சவாலாக அமையும்.
தன்னிச்சையாக ஆன்டிபயாடிக் மருந்துகளை யாரும் சாப்பிட கூடாது. முறையான பரிசோதனைக்கு பின், டாக்டர் பரிந்துரைக்கும் மருந்தை உரிய அளவிலும், குறிப்பிட்ட கால அளவிலும் உட்கொள்ள வேண்டும்.
மருத்துவமனைகள் மற்றும் டாக்டர்கள், ஆன்டிபயாடிக் சிகிச்சையை துவங்கும் முன் கல்ச்சர் பரிசோதனையையும், உள்ளூர் ஆன்டிபயோகிராமையும் பயன்படுத்த வேண்டும். 48– 72 மணி நேரத்துக்குள் மருந்துச்சீட்டை மறுஆய்வு செய்ய வேண்டும்.
கேரளா, குஜராத் போல, டாக்டர் சீட்டு இருந்தால் மட்டுமே ஆன்டிபயாடிக் மருந்துகளை விற்க வேண்டும் என்பதை மருந்து கடைகளுக்கு விதியாக அமல்படுத்த வேண்டும்.
இவ்வாறு டாக்டர்கள் கூறினர்.
