/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
24 மணி நேரமும் மது விற்பனை அமோகம்
/
24 மணி நேரமும் மது விற்பனை அமோகம்
ADDED : ஜூன் 16, 2025 10:08 PM

கோவை புறநகர் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில், 24 மணி நேரமும் மது விற்பனை அமோகமாக நடக்கிறது.
கோவை வடக்கு புறநகர் பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், போதை மாத்திரை, கஞ்சா உள்ளிட்டவையின் விற்பனை அதிகரித்து வருகிறது. போலீசார் அவ்வப்போது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டாலும், இவற்றை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை.
இந்நிலையில், டாஸ்மாக் மதுபார்களின் வாயிலாக தினமும், 24 மணி நேரமும் மது விற்பனை நடக்கிறது. டாஸ்மாக் மதுக்கடைகள் பகல், 12:00 மணிக்கு திறந்து, இரவு, 10:00 மணிக்கு அடைக்க வேண்டும் என்பது விதிமுறை. ஆனால், மதுக்கடைகள் அருகே உள்ள பார் வாயிலாக, 24 மணி நேரமும் மது விற்பனை நடக்கிறது. நரசிம்மநாயக்கன்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் போன்ற மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் காலை, 7:00 மணிக்கே பார்கள் வாயிலாக மது விற்பனை அமோகமாக நடக்கிறது. பாட்டில் ஒன்றுக்கு அதன் விலையை பொறுத்து, 50 ரூபாய் முதல், 70 ரூபாய் வரை அதிகம் வைத்து விற்பனை செய்யப்படுகிறது. மதியம், 12:00 மணிக்கு பிறகு கடைகளில் மது விற்பனை செய்யப்படுகிறது. போலீசுக்கு 'மாமூல்' செல்வதால், டாஸ்மாக் மதுபான விற்பனை முறைகேட்டை அவர்கள் கண்டு கொள்வதில்லை.
இது குறித்து, பொதுமக்கள் கூறுகையில்,' இருசக்கர வாகனங்களில் வந்து, காலை நேரத்தில் மது அருந்தி செல்லும் நபர்களால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதில் மது அருந்தும் நபர்கள் மட்டுமல்லாமல், அப்பாவி பொதுமக்களும் விபத்துகளில் சிக்கி வாழ்க்கையை தொலைக்கும் பரிதாபம் உள்ளது.
மதுக்கடைகளின் எண்ணிக்கையை குறைப்பதோடு, விற்பனை செய்யும் நேரத்தையும் குறைத்தால் மட்டுமே சமுதாயத்தில் நடக்கும் பல்வேறு குற்ற செயல்களையும், அது தொடர்பான சம்பவங்களையும் கட்டுப்படுத்த முடியும்.
குடியால் கணவர், பிள்ளைகளை இழந்து நிற்கும் தாய்மார்களின் துயரம் நீங்கும். இதை உணர்ந்து அரசு செயல்பட வேண்டும்' என்றனர்.