/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆழியாறு அணை, ஆற்றுப்பகுதியில்... எச்சரிக்கை அறிவிப்பு! அத்துமீறல்களை தடுக்க நடவடிக்கை
/
ஆழியாறு அணை, ஆற்றுப்பகுதியில்... எச்சரிக்கை அறிவிப்பு! அத்துமீறல்களை தடுக்க நடவடிக்கை
ஆழியாறு அணை, ஆற்றுப்பகுதியில்... எச்சரிக்கை அறிவிப்பு! அத்துமீறல்களை தடுக்க நடவடிக்கை
ஆழியாறு அணை, ஆற்றுப்பகுதியில்... எச்சரிக்கை அறிவிப்பு! அத்துமீறல்களை தடுக்க நடவடிக்கை
ADDED : மே 24, 2025 12:36 AM

பொள்ளாச்சி : பொள்ளாச்சி அடுத்துள்ள, ஆழியாறு அணை, ஆறு உள்ளிட்ட வெவ்வேறு ஆபத்தான இடங்களில், சுற்றுலா பயணியரின் அத்துமீறலை தடுக்கும் வகையில், எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
பொள்ளாாச்சி அருகே உள்ள, ஆழியாறு ஆற்றில் ஏப்., மாதம், சென்னையைச் சேர்ந்த தனியார் மருத்துவ கல்லுாரி மாணவர்கள் மூன்று பேர் மூழ்கி உயிரிழந்தனர். இதேபோன்று, அவ்வப்போது, ஆழியாறு தடுப்பணை, அணை, ஆற்றில் குளிக்கும் போது, சுற்றுலா பயணியர் நீரில் மூழ்கி உயிரிழப்பது அதிகரித்து வருகிறது.
இதை தடுக்கும் வகையில், ஆழியார் அணை, ஆறு உள்ளிட்ட நீர் நிலையை ஒட்டிய பகுதிகளில், நீர்வளத்துறை சார்பில், விழிப்புணர்வு பேனர்கள் வைக்கப்பட்டன.
போலீசார் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள், கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டனர். ஐந்து நாட்கள் மட்டுமே கண்காணிப்பு பணி இருந்த நிலையில், பின்னர் கைவிடப்பட்டது.
இதனை சாதமாக்கிக் கொண்டு, சுற்றுலாப் பயணியர் ஆபத்தான நீர்நிலைப் பகுதிகளில் அத்துமீறி நுழைந்தனர். குழந்தைகள், பெரியவர்கள் என பலரும், அணைக்கான நீர்வரத்து உள்ள ஆறுகளில் குளிக்கவும், போட்டோ எடுக்கவும் முற்பட்டனர்.
இதனால், அத்துமீறலில் ஈடுபடும் சுற்றுலாப் பயணியரை கண்டறிந்து தடுக்கவும், எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்கவும் கோரிக்கை எழுந்தது. அதன்பேரில், தற்போது, ஆபத்தான நீர்நிலைகளில், ஆறு இடங்களில், அனைத்து தரப்பு சுற்றுலாப் பயணியரும் அறிந்து கொள்ளும் வகையில், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில், எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
தற்போது, கோடை விடுமுறை என்பதால், அதிகப்படியான சுற்றுலாப் பயணியர் வருகை புரிகின்றனர். அவர்களின் பாதுகாப்பு கருதி, ஆபத்தான நீர்நிலைப் பகுதிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஆழியாறு தடுப்பணை, ஆழியாறு அணை உள்ளிட்ட, ஆறு வெவ்வேறு இடங்களில் எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில், 'ஆழியாறு ஆறு மற்றும் அணை மிகவும் ஆழமானவை. அணை மற்றும் ஆற்றில் நுழைவதற்கும், குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால், காவல்துறை வாயிலாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,' என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேநேரம், போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதால், தடையை மீறுவோர் உடனடியாக கண்டறியப்பட்டு, எச்சரித்து அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
இவ்வாறு, கூறினர்.