/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இப்போது கொண்டாடுவதெல்லாம் மினி தீபாவளி! அந்த காலம் மாதிரி வருமா ஆதங்கமும் இருக்குது
/
இப்போது கொண்டாடுவதெல்லாம் மினி தீபாவளி! அந்த காலம் மாதிரி வருமா ஆதங்கமும் இருக்குது
இப்போது கொண்டாடுவதெல்லாம் மினி தீபாவளி! அந்த காலம் மாதிரி வருமா ஆதங்கமும் இருக்குது
இப்போது கொண்டாடுவதெல்லாம் மினி தீபாவளி! அந்த காலம் மாதிரி வருமா ஆதங்கமும் இருக்குது
ADDED : அக் 14, 2025 09:59 PM

தீ பாவளிக்கு ஒரு சில நாட்களுக்கு முன்பே, பட்டாசுகளை வாங்கி வெடிக்கிறதா என்று ரிகர்சல் பார்ப்போம். துணிகளின் அலமாரியில் வைத்திருக்கும் புத்தாடையின் வாசத்தை நுகர்ந்து பார்ப்போம். விடிந்தால் தீபாவளி என்றால், கால்களில் சக்கரம் கட்டி பறப்போம்.
தீபாவளியை எப்படி கொண்டாடினோம் என்பது குறித்து சொல்கிறார், கொங்குநாடு கலை அறிவியல் கல்லுாரி உதவி பேராசிரியை அனிதா.
தீபாவளி என்றாலே மகிழ்ச்சி தான். பொதுவாகவே எல்லோருக்குமே, சிறு வயதில்தான் நிறைய தீபாவளி எதிர்பார்ப்புகள் இருக்கும். அதிகாலை விரைவாக எழுந்து, மிளகு, இஞ்சி போட்டு காய்ச்சிய நல்லெண்ணெய் தேய்த்து, விறகு அடுப்பில் காய்ச்சிய வெந்நீரில் ஒரு குளியல்.
அடுத்ததாக புத்தாடை எதிர்பார்ப்பு தற்போது இருக்கும் காலம் போல், நினைத்தது போல் துணி எடுக்கும் வழக்கம் அன்று இல்லை. தீபாவளி, பிறந்தநாள், பொங்கல் மட்டும் தான். புது மாதிரி என்னென்ன பட்டாசுகள் மார்க்கெட்டுக்கு வந்து இருக்கிறது என்று பார்த்து வாங்குவது என்றும், வெடிகள் மத்தாப்பு, புஸ்வாணம், இதைக் கொஞ்சம் கார்த்திகை தீபத்திற்கு என்று பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வார்கள் அம்மா.
(எல்லாவற்றையும் ஒரே நாளில்கொளுத்திக் கரியாக்காதீர்கள் என்பது அம்மாவின் கருத்து) அப்பா,” குழந்தைகளை திருப்தியாக வெடிக்க விடு! கார்த்திகைக்கு வேறு வாங்கிக் கொள்ளலாம் ”என்பார்கள். பூஜையின் போது சரவெடி வெடிக்கப்படும்.
சக வயது தோழர், தோழிகளுடன் நான் அது வாங்கப் போகிறேன், இது வாங்கப் போகிறேன் என்று சொல்லிக் கொள்வது, துாக்கத்திலும், கனவிலும் அதைப்பற்றிய நினைவுகள் தான். 10 நாட்களுக்கு முன்பே, பலகாரங்கள் தயார் செய்வார் அம்மா.
பிஸ்கட் டின்கள் மற்றும் பித்தளை, எவர்சில்வர் டிரம்களில் பலகாரம் செய்து வைத்திருப்பார்கள். தீபாவளி அன்று வீட்டில் சாமி கும்பிட்டபின் புத்தாடைகளை உடுத்திக் கொண்டு, அருகே வசிப்பவர்களுக்கும், உறவினர்களுக்கும் பலகாரம் கொடுத்து வரச் சொல்வார்கள் அம்மா.
ஊசி வெடி ஆளுக்கு ஒரு பாக்கெட், பட்டர்பிளை, பாம்பு மாத்திரை, என்று தனித்தனியாக எடுத்துக் கொண்டு, அவரவர்களுடைய நண்பர்களுடன் கதைகள் பேசி மகிழ்ந்து வெடிப்போம்.
ஒன்று ஒன்றாக வெடிக்கச் சோம்பல்பட்டும் சத்தம் அதிகமாய் கேட்க ஆசைப்பட்டும், ஆறு ஏழு ஊசி வெடியின் திரிகளை ஒன்றாகச் சுற்றி வைத்து வெடித்து மகிழ்வோம். பெரிய வெடிகள், லட்சுமிவெடி, பெரியசரம், தரை சக்கரம், புஸ்வாணம் எல்லாம் அப்பா பக்கத்தில் இருக்கும் போது தான் வெடிக்க வேண்டும் என்பது கட்டளை. கூட்டமா சொந்தக்காரர்களோட கொண்டாடியது அந்த தீபாவளி.
இப்போது, ஒரு குழந்தை. கணவன் மனைவி. மதியம் லஞ்சுக்கு ஓட்டலுக்கு போய் விட்டு, ஆன்லைன் ஷாப்பிங் செய்து விட்டு முடித்துக் கொள்கிறார்கள். இப்பல்லாம் நடப்பது மினி தீபாவளி தான்.
தீபாவளி என்பது வெறும் பண்டிகையல்ல. அது நம் பாரம்பரியம். எத்தனை இடையூறுகள் தடைகள், எதிர்ப்புகள் எந்த ரூபத்தில் வந்தாலும், அதை எதிர்கொண்டு எதிர்கால சந்ததிக்கு நம் பாரம்பரியத்தை கடத்தும் கடமை நமக்கு இருக்கிறது என்று மட்டுமே சொல்லத் தோன்றுகிறது.
இவ்வாறு, அவர் கூறினார்.