/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கால்நடைகளுக்கு இருக்கு ஆம்புலன்ஸ் சேவை: விவசாயிகளுக்கு தான் இல்லை விழிப்புணர்வு
/
கால்நடைகளுக்கு இருக்கு ஆம்புலன்ஸ் சேவை: விவசாயிகளுக்கு தான் இல்லை விழிப்புணர்வு
கால்நடைகளுக்கு இருக்கு ஆம்புலன்ஸ் சேவை: விவசாயிகளுக்கு தான் இல்லை விழிப்புணர்வு
கால்நடைகளுக்கு இருக்கு ஆம்புலன்ஸ் சேவை: விவசாயிகளுக்கு தான் இல்லை விழிப்புணர்வு
ADDED : நவ 02, 2025 10:36 PM
- நமது நிருபர் -: விவசாயிகளிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததாலும், இரவில் செயல்படுத்தப்படாததாலும், கால்நடை ஆம்புலன்ஸ் சேவை திட்டம் பெயரளவுக்கே உள்ளது.
கால்நடைகளை தாக்கும் நோய்கள் மற்றும் கர்ப்ப கால சிகிச்சைகளுக்காக, கால்நடை வளர்ப்போரும், விவசாயிகளும், அரசு கால்நடை மருந்தகங்களை நாடுகின்றனர்.
கடைக்கோடி கிராமங்களில் வசிக்கும் விவசாயிகள், தாங்கள் வளர்க்கும் கால்நடைகளுக்கு குறித்த நேரத்தில் சிகிச்சை பெற முடியாமல், சில சமயங்களில், கால் நடைகள் உயிரிழக்கும் அவலம் ஏற்படுகிறது.
இதை நிவர்த்தி செய்யும் வகையில், '1962' என்ற கால்நடை ஆம்புலன்ஸ் சேவை திட்டம் கொண்டு வரப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்துக்கு என, ஒரே ஒரு ஆம்புலன்ஸ் மட்டுமே இருந்த நிலையில், சமீபத்தில், மாவட்டத்தில் உள்ள, 13 ஒன்றியத்துக்கும் தலா ஒரு ஆம்புலன்ஸ் என, திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.
இருப்பினும், விவசாயிகள் இதில் பெரிய அளவு ஆர்வம் காட்டுவதில்லை.
காரணம், இரவு நேரங்களில் ஆம்புலன்ஸ் சேவை கிடையாது. மேலும், அருகிலுள்ள தனியார் மருத்துவர்கள், எந்த நேரத்தில் அழைத்தாலும் சேவை வழங்குவர் என்பதால், உடனடியாக அவர்களை அழைத்து கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கின்றனர்.
அரசு கால்நடை மருத்துவர்கள் கூறுகையில், 'போலி மருத்துவர்களை நம்பி விவசாயிகள் ஏமாறாமல் இருக்கவும், கால்நடைகளுக்கு தரமான சிகிச்சைகள் கிடைக்கவும், இத்திட்டம் மிகவும் பயனளிக்கிறது.
இத்திட்டத்தின் கீழ் இயக்கப்படும் ஆம்புலன்சில், மருத்துவர், உதவியாளர், டிரைவர் ஆகியோர் தயாராக இருப்பர்.
'கிராமங்களுக்கே நேரடியாக வந்து சிகிச்சை அளிப்பதுடன், கூடுதல் சிகிச்சை தேவைப்படுமானால், கால்நடைகளை மருத்துவமனைக்கு அழைத்து செல்வர்.
விரல் விட்டு எண்ணும் அளவுக்கே, விவசாயிகள் இதன் மூலம் பயனடைகின்றனர். சிறப்பான இத்திட்டத்தை முறையாக பயன்படுத்த விவசாயிகளிடையே விழிப்புணர்வு வேண்டும்' என்றனர்.
பல்லடம் பனப்பாளையம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க நிர்வாகி ஈஸ்வரமூர்த்தி கூறுகையில், ''இப்படி ஒரு ஆம்புலன்ஸ் திட்டம் இருப்பதே பெரும்பாலான விவசாயிகளுக்கு தெரியாது.
இதுகுறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை. இரவிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும்.
அப்போது தான் இது வெற்றிகரமாக மாறும்,'' என்றார்.

