sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

லோக்சபா தேர்தல் பிரசாரம் செய்ய பகல்ல வாங்க யானை வந்துரும்...வேட்பாளர்களுக்கு கட்சி நிர்வாகிகள் அறிவுறுத்தல்

/

லோக்சபா தேர்தல் பிரசாரம் செய்ய பகல்ல வாங்க யானை வந்துரும்...வேட்பாளர்களுக்கு கட்சி நிர்வாகிகள் அறிவுறுத்தல்

லோக்சபா தேர்தல் பிரசாரம் செய்ய பகல்ல வாங்க யானை வந்துரும்...வேட்பாளர்களுக்கு கட்சி நிர்வாகிகள் அறிவுறுத்தல்

லோக்சபா தேர்தல் பிரசாரம் செய்ய பகல்ல வாங்க யானை வந்துரும்...வேட்பாளர்களுக்கு கட்சி நிர்வாகிகள் அறிவுறுத்தல்


ADDED : மார் 24, 2024 11:55 PM

Google News

ADDED : மார் 24, 2024 11:55 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெ.நா.பாளையம்:கோவை வடக்கு, புறநகர் பகுதிகளில் மலையோர கிராமங்களில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதால், லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், பகல் நேரங்களில் மட்டும், இப்பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட, அந்தந்த கட்சிகளின் பிரதிநிதிகள், தங்களது வேட்பாளர்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.

கோவை லோக்சபா தொகுதிக்குட்பட்ட ஆனைகட்டி, பாலமலை உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம், கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

பொதுவாக, காட்டு யானைகளின் இடப்பெயர்ச்சி காலமான செப்., முதல் ஜன., வரை கோவை வடக்கு புறநகர் பகுதிகளில் மலையோர கிராமங்களில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படும்.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, ஆண்டு முழுவதும் காட்டு யானைகளின் நடமாட்டம் இப்பகுதியில் உள்ளது. அவற்றின் நடமாட்டத்தை முழுமையாக கட்டுப்படுத்த இயலவில்லை.

கோவை லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட சின்னதடாகம், வீரபாண்டி புதூர், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், மடத்தூர், பாப்பநாயக்கன்பாளையம், வரப்பாளையம் ஆகிய பகுதிகளிலும், பெரியநாயக்கன்பாளையம் அருகே கோவனூர், நாயக்கன்பாளையம், பெருக்கைப்பதி, பெருக்கைப்பதி புதூர், பசுமணி, குஞ்சூர்பதி, மாங்குழி உள்ளிட்ட மலை கிராமங்களிலும் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இங்கு காட்டு யானைகள் மட்டுமல்லாமல், மான், கரடி, காட்டுப்பன்றி, காட்டு மாடு, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது.

பகலில் பிரசாரம்


இந்நிலையில், கோவை லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அதிகாலை, மாலை, மற்றும் இரவு நேரங்களை தவிர, பகல் நேரத்தில் மட்டும் மலை கிராமங்களில் பிரசாரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து உள்ளது.

இது குறித்து லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பிரதிநிதிகள் கூறுகையில்,'பிரசாரத்திற்கு குறுகிய காலமே இருப்பதால், மலை கிராமங்களுக்கு பிரசாரம் செய்ய செல்வதா, வேண்டாமா என்ற குழப்ப நிலை நீடித்து வருகிறது.

வேட்பாளர்கள் அதிகாலை, மாலை, இரவு நேரங்கள் தவிர, பகல் நேரத்தில் மட்டுமே பிரசாரம் செய்யும் வகையில் பயணத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது' என்றனர்.

இது குறித்து, இயற்கை ஆர்வலர்கள் கூறுகையில்,'சுமார், 38 ஆண்டுகளுக்குப் பிறகு பவானி ஆற்றில் தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்து விட்டது.இதனால் இரவு நேரம் மட்டும் இல்லாமல், பகல் நேரத்திலும் வனவிலங்குகள் தாகம் தீர்க்க மலையோர கிராமங்களை தேடி வருகின்றன. இந்நிலையில், வேட்பாளர்கள் மற்றும் அவரது கட்சியினர் மலை கிராமங்களில் கூட்டம், கூட்டமாக வந்து நடத்தும் பிரசாரத்தால், மனித, வனவிலங்கு மோதல் ஏற்படலாம். இதை தவிர்க்க மலை கிராமங்களில் வேட்பாளர்கள் பிரச்சாரத்தில் ஈடுபடுவதை தவிர்க்கலாம்' என்றனர்.

வேட்பாளர்கள் கண்டிப்பாக வரவேண்டும்

இது குறித்து, ஆனைகட்டி, பாலமலை உள்ளிட்ட மலைப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின மக்கள் கூறுகையில்,' பல ஆண்டுகளாக எங்களுடைய பல்வேறு அடிப்படை பிரச்சனைகள் தீர்க்கப்படாமல், கிடப்பில் போடப்பட்டுள்ளன. பலருக்கு குடியிருக்க வீடுகள் இல்லை. ஏற்கனவே கட்டிக் கொடுக்கப்பட்ட வீடுகளும் பழுதடைந்து, எப்போது வேண்டுமானாலும், இடிந்து விழும் என்ற நிலையில் உள்ளது. குடிதண்ணீர் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் இல்லை.இந்நிலையில், எங்கள் பகுதிக்கு லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வந்தால், எங்கள் நிலைமையை அவர்கள் உணர்ந்து கொள்வார்கள். எனவே, எங்கள் பகுதியை காண வேட்பாளர்கள் கண்டிப்பாக வரவேண்டும்' என்றனர்.








      Dinamalar
      Follow us