/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
இஸ்திரி பெட்டியும், ரேஷன் கார்டும் வேசம்மாவின் தேவை இவ்வளவுதான்!
/
இஸ்திரி பெட்டியும், ரேஷன் கார்டும் வேசம்மாவின் தேவை இவ்வளவுதான்!
இஸ்திரி பெட்டியும், ரேஷன் கார்டும் வேசம்மாவின் தேவை இவ்வளவுதான்!
இஸ்திரி பெட்டியும், ரேஷன் கார்டும் வேசம்மாவின் தேவை இவ்வளவுதான்!
UPDATED : நவ 09, 2025 08:58 AM
ADDED : நவ 09, 2025 12:32 AM

சோ கம் நிறைந்த ஒரு வாழ்க்கையை, அதன் பாட்டுக்கு போக விட்டிருக்கிறார், கோவை பிள்ளையார் புரத்தை சேர்ந்த வேசம்மா.
68 வயது கடந்து விட்டது. இவருக்கு ஒரு மகள், ஒரு மகன். சமீபத்தில் மகன் இறந்து விட்டார். இப்போது தனியாக வசிக்கிறார்.
வேசம்மா, 20 வருடங்களுக்கு முன்பு வரை, வீட்டு வேலைக்கு சென்று வந்திருக்கிறார். காலப்போக்கில், உடலில் தளர்வு ஏற்பட, அந்த வேலைக்கும் செல்ல முடியவில்லை. பின், துணி இஸ்திரி போடுவதில் சில விஷயங்களை அடிப்படையாக கற்றுக் கொண்டு, இத்தொழிலில், கடந்த 20 வருடங்களாக ஈடுபட்டு வருகிறார்.
குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் 2 பகுதியில், இஸ்திரி போட்டு கொடுக்கிறார். இஸ்திரி பெட்டியும், ஆங்காங்கே கழன்று விட, அவ்வப்போது பெட்டிக்கு சிகிச்சை பார்க்க வேண்டிய நிலை. துணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒரு நாளுக்கு, 150 ரூபாயில் இருந்து 200 ரூபாய் வரை வருமானம் கிடைக்கிறது.
ரேஷன் கார்டு இல்லாததால், ரேஷன் பொருட்களும் கிடைக்காமல் போய் விட்டது. தனக்கு வரும் சொற்ப வருமானத்தை கையில் வைத்துக் கொண்டு, அப்படியே வாழ்க்கையை அதன் போக்கில் நகர்த்துகிறார்.
சிறுக, சிறுக சேர்த்து வைத்த தொகையை, பேரன் திருமணத்துக்கும், பேத்தியின் விசேஷத்துக்கும் செலவிட்டிருக்கிறார். பார்வையில் குறைபாடு இருப்பதால், மாலை வேளையில் விரைவில் வீட்டுக்கு சென்று விடுகிறார்.
''உங்களுக்கு பெரிய ஆசை ஏதாவது இருக்கிறதா'' என்ற கேள்விக்கு, ''பெரிசா ஆசை ஏதும் இல்லை. இப்போதைக்கு ஒரு பித்தள இஸ்திரி பெட்டியும், ஒரு ரேஷன் கார்டும் இருந்தா போதுங்க...,'' என்றார்.
வேசம்மாவுக்கு உதவ நினைத்தால், 95437 93491 என்ற எண்ணை அழைக்கலாம்.

