/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகராட்சியை அண்ணா மார்க்கெட் வியாபாரிகள் முற்றுகை
/
மாநகராட்சியை அண்ணா மார்க்கெட் வியாபாரிகள் முற்றுகை
மாநகராட்சியை அண்ணா மார்க்கெட் வியாபாரிகள் முற்றுகை
மாநகராட்சியை அண்ணா மார்க்கெட் வியாபாரிகள் முற்றுகை
ADDED : ஜன 28, 2025 11:50 PM

கோவை; தின வாடகையை குறைக்கக்கோரி, கோவை மாநகராட்சி அலுவலகத்தை, அண்ணா மார்க்கெட் வியாபாரிகள் நேற்று முற்றுகையிட்டனர்.
கோவை - மேட்டுப்பாளையம் ரோடு, 69வது வார்டில் அண்ணா மார்க்கெட் செயல்படுகிறது; 476 கடைகள் நடத்தப்படுகின்றன. இவ்வளாகத்தை புதுப்பித்து, மேடைக்கடைகள் அமைக்கும் பணி, மாநகராட்சியால் மேற்கொள்ளப்படுகிறது.
இதுவரை, 81 கடைகள் கட்டப்பட்டிருக்கின்றன. புதிதாக கடைகள் கட்டுவதால், பொது ஏல முறையில் டெண்டர் கோரி, ஒதுக்கீடு செய்ய மாநகராட்சி திட்டமிட்டது. 37 ஆண்டுகளாக கடை நடத்தி வருவதால், பழைய வியாபாரிகளுக்கே ஒதுக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது.
டெண்டர் முறை கையாண்டால், புதியவர்கள் வருவதற்கும், பழைய வியாபாரிகளுக்கு கடை கிடைக்காத சூழலும் உருவாகும்; அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கும் என்பதும் எடுத்துரைக்கப்பட்டது. இக்கோரிக்கையை மாநகராட்சி அதிகாரிகள் ஏற்றுக் கொண்டனர்.
இப்போது தினசரி வாடகையாக, நாளொன்றுக்கு, 300 ரூபாய், குப்பை வரியாக, 25 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது, சிறு குறு வியாபாரிகளை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
வாடகையை குறைக்கக்கோரி, வியாபாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என, 900 பேர், டவுன்ஹாலில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.
ஒரே நேரத்தில் நுாற்றுக்கணக்கானோர் திரண்டதால், பரபரப்பு ஏற்பட்டது. குறைகேட்பு கூட்டத்தில் இருந்த மேயர் ரங்கநாயகி, கமிஷனர் சிவகுரு பிரபாகரன் ஆகியோரிடம், கோவை அண்ணா மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் மனு கொடுக்கப்பட்டது. கோரிக்கையை பரிசீலிப்பதாக, கமிஷனர் தெரிவித்தார்.