ADDED : அக் 10, 2025 12:34 AM

பெ.நா.பாளையம்; துடியலூர் அருகே ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரி வளாகத்தில் நடந்த அண்ணா பல்கலை மண்டல அளவிலான டேபிள் டென்னிஸ் இறுதிப் போட்டியில், வட்டமலை பாளையம் ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரி அணி வெற்றி பெற்றது.
அண்ணா பல்கலை, 11வது மண்டலம் சார்பில், ஆண்களுக்கான டேபிள் டென்னிஸ் போட்டிகள் கடந்த இரண்டு நாட்களாக 'நாக் அவுட்' முறையில் நடந்தன. அரை இறுதிக்கு ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரி, குமரகுரு இன்ஜினியரிங் கல்லூரி, எஸ்.என்.எஸ் இன்ஜினியரிங் கல்லூரி மற்றும் எஸ்.என்.எஸ்., டெக்னாலஜி ஆகிய கல்லூரி அணிகள் தகுதி பெற்றன.
முதல் அரை இறுதியில், ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரி, குமரகுரு இன்ஜினியரிங் கல்லூரி அணியை வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இரண்டாவது அரை இறுதி போட்டியில், எஸ்.என்.எஸ்., இன்ஜினியரிங் கல்லூரி, எஸ்.என்.எஸ். டெக்னாலஜி கல்லூரி அணியை வீழ்த்தி, இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
இறுதிப் போட்டியில், ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரி அணி, எஸ்.என்.எஸ். இன்ஜினியரிங் கல்லூரி அணியை வென்று சாம்பியன் பட்டம் பெற்றது. மூன்றாம் இடத்துக்கான போட்டியில், குமரகுரு இன்ஜினியரிங் கல்லூரி அணி, எஸ்.என்.எஸ். டெக்னாலஜி அணியை வென்றது.
வெற்றி பெற்ற அணிகளுக்கு பதக்கம், சான்றிதழ்கள், கோப்பைகள் ஆகியவற்றை ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரி முதல்வர் சவுந்தரராஜன், துறைத்தலைவர் சீனிவாசன் வழங்கினர். போட்டிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குனர் நித்தியானந்தம் செய்து இருந்தார்.