/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவைக்கான அறிவிப்புகள்; மாநகராட்சி அதிகாரிகள் ஏமாற்றம்
/
கோவைக்கான அறிவிப்புகள்; மாநகராட்சி அதிகாரிகள் ஏமாற்றம்
கோவைக்கான அறிவிப்புகள்; மாநகராட்சி அதிகாரிகள் ஏமாற்றம்
கோவைக்கான அறிவிப்புகள்; மாநகராட்சி அதிகாரிகள் ஏமாற்றம்
ADDED : ஏப் 14, 2025 06:37 AM
கோவை : கோவைக்காக தமிழக அரசு சிறப்பு நிதி ஒதுக்கி, பல்வேறு அறிவிப்புகளை, சட்டசபை மானியக்கோரிக்கையில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது; அவை அறிவிக்கப்படவில்லை.
கோவை மாநகராட்சி நிர்வாகம், ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டினாலும், மத்திய - மாநில அரசுகள் வழங்கும் மானியம் மற்றும் சிறப்பு திட்ட நிதி மூலமாக பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அவ்வகையில், மாநகராட்சி பகுதியை மேம்படுத்துவதற்கு பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு, தமிழக அரசின் நிதி ஒதுக்கீடு மற்றும் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. சட்டசபை கூட்டத் தொடரில் மானியக் கோரிக்கையின் போது, சிறப்பு திட்டங்களாக அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
அவற்றில், ரூ.235 கோடியில், சத்தி சாலையில் இருந்து அவிநாசி சாலை வழியாக திருச்சி சாலையில் உள்ள நொய்யல் வரை, 6.80 மீட்டர் நீளத்துக்கு சங்கனுார் பள்ளத்தின் இருபுறமும் தடுப்புச்சுவர் கட்டி, தார் சாலை அமைக்கும் திட்டம்; மாநகராட்சி பராமரிக்கும் குளங்களில் மேலும் ஐந்து இடங்களில், 50 கோடி ரூபாயில் சுத்திகரிப்பு நிலையங்கள் கட்டும் திட்டம்; ரூ.200 கோடியில், நொய்யல் ஆற்றில் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்தல்.
ரூ.150 கோடியில் சூரிய ஒளி மின்னுற்பத்தி நிலையம் கட்டும் திட்டம்; ரூ.96 கோடியில் மழை நீர் வடிகால் கட்டுதல்; குப்பையில் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் உள்ளிட்ட பணிகளுக்கு திட்ட அறிக்கை தயாரித்து, தமிழக அரசின் ஒப்புதலுக்கும் நிதி ஒதுக்கி, அறிவிப்பு வெளியிடுவதற்கும் மாநகராட்சியில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால், மானியக்கோரிக்கையில் கோவை மாநகராட்சிக்கான புதிதாக சிறப்பு அறிவிப்புகள் எதுவும் வெளியிடாதது, மாநகராட்சி அதிகாரிகளுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.
அவர்கள் கூறுகையில், 'நிதி ஒதுக்கீட்டுக்காக திட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கலாம். அத்திட்டங்கள் அனைத்தும் மிகவும் முக்கியமானவை என்பதால், எதிர்காலத்தில் கண்டிப்பாக செயல்படுத்தப்படும்' என்றனர்.