/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
110வது விதியின் கீழ் அறிவிப்புகள் ஏமாற்றமே! ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பேட்டி
/
110வது விதியின் கீழ் அறிவிப்புகள் ஏமாற்றமே! ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பேட்டி
110வது விதியின் கீழ் அறிவிப்புகள் ஏமாற்றமே! ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பேட்டி
110வது விதியின் கீழ் அறிவிப்புகள் ஏமாற்றமே! ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பேட்டி
ADDED : ஏப் 29, 2025 06:16 AM
கோவை:
அரசு ஊழியர்கள் நலனுக்காக, 110வது விதியின் கீழ் சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் வெளியிட்ட அறிவிப்பில், வாழ்வாதார கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை பற்றி, எந்த அறிவிப்பும் வழங்கப்படாதது, வருத்தத்தையும், ஏமாற்றத்தையும் அளிப்பதாக, ஆசிரியர் சங்கங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக கோவை மாவட்டத் தலைவர் சரவணகுமார் கூறியதாவது:
ஜாக்டோ-- - ஜியோவின் 22 ஆண்டு போராட்டத்தின் நோக்கம், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வருவதே. தற்போது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம், தேசிய ஓய்வூதியத் திட்டம் ஆகியவற்றுடன், பழைய ஓய்வூதியத் திட்டத்தை ஒப்பிட்டு, அறிக்கை சமர்ப்பிக்கச் சொல்லப்படுவது ஏமாற்றமாகும்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த, அறிக்கை தேவையில்லை. அரசு ஊழியர்களின் ஆதரவால் ஆட்சி அமைத்தவர்கள், நான்கு ஆண்டுகள் ஆனபின்பும் கூட, இதை நிறைவேற்றவில்லை.
எதிர்க்கட்சிகள் பலமடைவதால், வெற்று அறிவிப்புகள் வழங்கப்படுகின்றன. பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து, செப்டம்பரில் அறிக்கை வரும் என கூறப்படுகிறது. அதுவும் சந்தேகம்தான். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற ஏன் தயக்கம்? ஜூன், ஜூலை மாதங்களில் வேலைநிறுத்த போராட்டத்திற்கான திட்டங்களை, ஜாக்டோ-- ஜியோ வகுத்து வருகிறது.
இவ்வாறு, அவர் கூறினார்.
தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக வருவாய் மாவட்டத் தலைவர் முகமது காஜா முகைதீன் கூறியதாவது:
கடந்த 10 ஆண்டுகளாக, புதிய ஆசிரியர் நியமனம் நடைபெறவில்லை. இடைநிலை ஆசிரியர்களை நியமித்து 12 ஆண்டுகள், பட்டதாரி ஆசிரியர்களை நியமித்து 10 ஆண்டுகள், முதுகலை ஆசிரியர்களை நியமித்து, மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன.
காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று, நீண்ட நாட்களாகக் கோரிக்கை விடுத்து வருகிறோம். தலைமை ஆசிரியர் பணியிடங்கள் 2,000க்கும் மேல் காலியாக உள்ளன.
தமிழகத்தில், பாதிக்கும் மேற்பட்ட உயர்நிலைப் பள்ளிகளில், தலைமை ஆசிரியர்கள் இல்லாதது கவலைக்கிடமானது. இது சார்ந்த அறிவிப்பு வெளியாகவில்லை.
இவ்வாறு, அவர் கூறினார்.