/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
230 புதிய சிவில் நீதிபதிகளுக்கு நியமன உத்தரவு
/
230 புதிய சிவில் நீதிபதிகளுக்கு நியமன உத்தரவு
ADDED : செப் 20, 2024 10:26 PM
கோவை : தமிழகத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட, 230 சிவில் நீதிபதிகளுக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது.
தமிழக நீதிமன்றங்களில் காலியாகவுள்ள, 245 சிவில் நீதிபதி பணியிடங்களை நிரப்ப, கடந்தாண்டு டிசம்பரில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு நடத்தப்பட்டது.
அதில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு, இந்தாண்டு பிப்ரவரியில் நேர்முக தேர்வு நடத்தி, தேர்வானவர்களின் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது.
ஆனால், தேர்வானவர்கள் பட்டியலில் இடஒதுக்கீடு முறை சரியாக பின்பற்றப்பட வில்லை என்று கூறி, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
விசாரித்த ஐகோர்ட், திருத்திய பட்டியலை வெளியிட உத்தரவிட்டது. இந்த உத்தரவை தொடர்ந்து மார்ச் 19ல் திருத்திய தேர்வானவர்கள் பட்டியலை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.
இந்த பட்டியலிலும், இடஒதுக்கீடு முறை சரியாக பின்பற்றப்படவில்லை என்று வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதன் காரணமாக, நீதிபதிகளை தேர்வு செய்த பிறகும், காலிபணியிடங்களை நிரப்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
ஐகோர்ட்டில், அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து, விசாரணை நடத்தப்பட்டது. இட ஒதுக்கீடு முறையினை சரியாக பின்பற்றி, புதிய நீதிபதிகளை நியமிக்க உத்தரவு பிறப்பித்தது.
அதன்படி, தமிழகம் முழுவதும் காலியாகவுள்ள சிவில் நீதிமன்றங்களுக்கு, புதிதாக தேர்வு செய்யப்பட்ட, 230 நீதிபதிகளுக்கு நேற்று முன்தினம் பணிநியமன உத்தரவு வழங்கப்பட்டது.
நீதிபதிகள் பணியாற்றும் இடங்களின் பட்டியலும் அறிவிக்கப்பட்டது. இதற்கான உத்தரவை, ஐகோர்ட் பதிவாளர் ஜோதிராமன் பிறப்பித்துள்ளார்.
இதனால், கோவை, திருப்பூர், மதுரை, திருச்சி, தஞ்சை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, திண்டுக்கல், சேலம், வேலுார், சென்னை என பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றும் 200க்கு மேற்பட்ட மாஜிஸ்திரேட்கள், சப்-கோர்ட் நீதிபதிகளுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டதோடு, நீதிபதி காலிப்பணியிட பிரச்னைக்கும் தீர்வு கிடைத்துள்ளது.