UPDATED : அக் 27, 2026 07:59 PM
ADDED : அக் 27, 2026 07:56 PM
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் வனப்பகுதியையொட்டியுள்ள பகுதிகளில், சட்டவிரோதமாக சோலார் மின் வேலிகளில், மின்சாரம் செலுத்தப்படுகிறதா என வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தென்னை, வாழை, பாக்கு விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. தேக்கம்பட்டி, ஓடந்துறை, சமயபுரம், ஊட்டி சாலை, கோத்தகிரி சாலை உள்ளிட்ட வனப்பகுதியையொட்டி உள்ள பல்வேறு பகுதிகளில் காட்டு யானை, காட்டு பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளின் தொந்தரவு அதிகம் உள்ளது. வனவிலங்குகள் விளைநிலங்களுக்குள் புகாமல் இருக்க, இப்பகுதிகளில் சோலார் மின்வேலி அமைக்கப்பட்டுள்ளது.
இதில் நேரடி மின்சாரம் மின்வேலியில் சட்டவிரோதமாக பாய்ச்சப்படுகிறதா என மேட்டுப்பாளையம் வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
இதுகுறித்து, மேட்டுப்பாளையம் வனத்துறையினர் கூறுகையில், சோலார் மின் வேலிகளில், அனுமதி அளிக்கப்பட்ட அளவே மின் அழுத்தம் இருக்க வேண்டும். சட்டவிரோதமாக நேரடியாக மின்சாரம் செலுத்தக்கூடாது. இதுதொடர்பாக, வனப்பகுதியையொட்டி உள்ள பகுதிகளில், மின் அளவை கணக்கீடும் கருவி வாயிலாக சோலார் மின் வேலிகளில் பரிசோதனை செய்யப்படுகிறது. சோதனையின் போது நேரடியாக மின்சாரம் செலுத்தப்பட்டிருந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர். ----
