/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு சாலையில் உருண்ட அர்ஜூன் சம்பத்
/
ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு சாலையில் உருண்ட அர்ஜூன் சம்பத்
ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு சாலையில் உருண்ட அர்ஜூன் சம்பத்
ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு சாலையில் உருண்ட அர்ஜூன் சம்பத்
ADDED : நவ 18, 2024 04:22 AM

கோவை: ஹிந்து மக்கள் கட்சி இளைஞர் அணி தலைவர் ஓம்கார் பாலாஜி போலீசாரால் கைது செய்யப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டு, துன்புறுத்துவதை கண்டித்தும், அவரை விடுவிக்க வலியுறுத்தியும் அக்கட்சியினர் போலீஸ் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்தனர்.
அதன்படி, கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன் நேற்று காலை, 11:00 மணிக்கு ஹிந்து மக்கள் கட்சியினர் 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் செய்ய வந்தனர். போலீசார் அனுமதி மறுத்து, அவர்களை கைது செய்தனர்.
கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில், தொண்டர்கள் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ய கோவை கலெக்டர் அலுவலகம் முன் திரண்டனர். அங்கிருந்து பேரணியாக செஞ்சிலுவை சங்கம் நோக்கி கோஷங்களை முழங்கிய படி வந்தனர்.
போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன் பேரணியை தொடர விடாமல், போலீசார் தடுத்தனர். அப்போது, அர்ஜுன் சம்பத் சாலையில் படுத்து உருண்டு தர்ணாவிலும், ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டார். அவருடன் இருந்த மாவட்ட தலைவர் மாணிக்கம் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.
அர்ஜுன் சம்பத் கூறியதாவது:
கட்சியின் இளைஞர் அணி மாநில தலைவர் ஓம்கார் பாலாஜி, ஈஷா யோகா மையத்துக்கு ஆதரவாக நடந்த ஆர்ப்பாட்டத்தில், நக்கீரன் கோபால் குறித்து மிரட்டும் தொனியில் பேசியதாக கூறி, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஓம்கார் பாலாஜி தன் வக்கீல் வாயிலாக நியாயம் கிடைக்க வேண்டி, கோர்ட்டை நாடியிருந்தார். சென்னை உயர் நீதிமன்றம் அவரை நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தது. அதற்கு முன்னதாக நள்ளிரவில் போலீசார் அத்துமீறி கைது செய்துள்ளனர்.
இது முற்றிலும் தவறான முன்னுதாரணம் மட்டுமல்லாமல் கோர்ட் அவமதிப்பாகும். போலீசார் திட்டமிட்டு வேண்டுமென்றே கைது செய்து, அவமானப்படுத்தி, துன்புறுத்துகின்றனர். அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.