/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாழையில் சாம்பல் சத்து குறைபாடு தவிர்க்கணும்!
/
வாழையில் சாம்பல் சத்து குறைபாடு தவிர்க்கணும்!
ADDED : அக் 28, 2024 12:35 AM
கிணத்துக்கடவு : வாழையில் சாம்பல் சத்து குறைபாட்டை சரி செய்ய, வேளாண் பல்கலைக்கழக பேராசிரியர் ஆனந்தராஜா ஆலோசனை வழங்கினார்.
கிணத்துக்கடவு வட்டாரத்தில், ஆண்டு தோறும், 500 ஏக்கர் அளவில் வாழை சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது, 200 ஏக்கர் அளவில் மட்டுமே வாழை பயிரிடப்பட்டுள்ளது. வாழையில் பல்வேறு நோய் மற்றும் சத்து குறைபாடு ஏற்படுகிறது.
இதில், சாம்பல் சத்து குறைபாடு நிறைந்த வாழை, கிணத்துக்கடவு வட்டாரத்தில் காணப்படுகிறது. சாம்பல் சத்து நிறைந்த வாழையை விவசாயிகள் பலர் முறையாக பாதுகாக்காமல் வெட்டி அகற்றுகின்றனர்.
சாம்பல் சத்து குறைபாட்டை போக்க, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பேராசிரியர் ஆனந்தராஜா ஆலோசனை வழங்கியுள்ளார். குறைபாடுள்ள வாழை மரத்தின் இலைகள் ஓரத்தில் கருகல் இருக்கும். உரம் அளித்தாலும் பெரிய அளவில் முன்னேற்றம் இருக்காது. வாழைத்தாரை மட்டும் பாதுகாக்க வாய்ப்புள்ளது.
இதற்கு, சல்பேட்டா பொட்டாஷ் ஒரு ஏக்கருக்கு இரண்டு கிலோ மற்றும் புரோஜிப் பவுடரை தண்ணீரில் கலந்து வாழையின் குலையில் நினையும் படி தெளிக்க வேண்டும். இதை, 18 அல்லது 20 நாட்கள் இடைவெளியில் மூன்று முறை தெளிக்க வேண்டும்.
சாம்பல் சத்து பற்றாக்குறையை சரி செய்ய, நீரில் கரையக்கூடிய பொட்டாசியம் நைட்ரேட் உரத்தை ஏக்கருக்கு ஒரு கிலோ வீதம், 100 லிட்டர் தண்ணீரில், 100 மில்லி ஒட்டு பசையுடன் கலந்து தெளிக்க வேண்டும், என்றார்.

