ADDED : அக் 27, 2026 08:26 PM
அன்னூர்: கணேசபுரத்தில் ஏ.டி.எம்.,மில் திருட முயற்சித்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.
கணேசபுரத்தில், கோவை சாலையில், ஹிட்டாச்சி என்னும் தனியார் ஏ.டி.எம்., உள்ளது. இந்த ஏ.டி.எம்.மில் பலரும் பணம் எடுத்து வருகின்றனர்.
இன்று (அக்.,27) காலை ஏ.டி.எம்., அறை 'சிசி' கேமரா காட்சிகளை, ஏ.டி.எம்., ஊழியர் பார்த்தபோது, முந்தைய நாள் அதிகாலை 2:00 மணிக்கு முகத்தை மூடியபடி வந்த மர்மநபர் ஏ.டி.எம்., அறையிலிருந்த கேமராவை மறைத்துள்ளார். சிறிது நேரம் கழித்து அங்கிருந்து சென்றுள்ளார் என தெரிய வந்தது.
இதையடுத்து, கணேசபுரம் ஏ.டி.எம்.மில் திருட முயற்சி நடந்ததால், நடவடிக்கை எடுக்கும்படி அன்னூர் போலீசில் புகார் அளித்தார்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். கோவை சாலையில் உள்ள 'சிசிடிவி' கேமரா காட்சிகளை குற்றப்பிரிவு போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
