/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆடி குண்டம் விழா ஆலோசனை கூட்டம்
/
ஆடி குண்டம் விழா ஆலோசனை கூட்டம்
ADDED : ஜூலை 13, 2025 08:50 PM
மேட்டுப்பாளையம்,; மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில், 32ம் ஆண்டு ஆடிக் குண்டம் விழா, ஜூலை 22ல் பூச்சாட்டுடன் துவங்குகிறது.
வரும், 27ம் தேதி கொடியேற்றமும், சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலாவும் நடக்கிறது. 28ம் தேதி பொங்கல் வைத்து குண்டம் திறப்பும், 29ம் தேதி அதிகாலை, 3:00 மணிக்கு பவானி ஆற்றில் இருந்து அம்மன் அழைப்பும், காலை, 6:00 மணிக்கு குண்டம் இறங்குதலும் நடக்க உள்ளது.
குண்டம் விழா குறித்து அரசு அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம், கோவை வடக்கு ஆர்.டி.ஓ., கோவிந்தன் தலைமையில் நடந்தது. கோவில் உதவி கமிஷனர் கைலாசமூர்த்தி வரவேற்றார். எம்.எல்.ஏ., செல்வராஜ் பேசுகையில், ''குண்டம் மிதிக்கும் பக்தர்களுக்கு காலில் தீக்காயம் ஏற்படாமல் இருக்க, நன்கு முதிர்ந்த ஊஞ்ச விறகை மட்டுமே, பயன்படுத்த வேண்டும். பிக்பாக்கெட் திருடர்களின் நடமாட்டம் அதிக அளவில் இருப்பதால், விழாவில் அதிகமான போலீஸ் கண்காணிப்பும், பாதுகாப்பும் போட வேண்டும்,'' என்றார்.
ஆர்.டி.ஓ., கோவிந்தன் பேசுகையில், ''பக்தர்கள் வருவதற்கு போதிய பஸ் மற்றும் அடிப்படை வசதிகளும், பாதுகாப்பு வசதிகளும் செய்ய வேண்டும். குண்டம் இறங்கும் பக்தர்களுக்கு, தேவையான வசதிகளை கோவில் நிர்வாகம் செய்து கொடுக்க வேண்டும்,'' என்றார்.
டி.எஸ்.பி., அதியமான், இன்ஸ்பெக்டர் சின்னக்காமணன், தாசில்தார் ராமராஜ் உட்பட பல்வேறு அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.