/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆட்டோ டிரைவர் தற்கொலை; போலீசை கண்டித்து மறியல்
/
ஆட்டோ டிரைவர் தற்கொலை; போலீசை கண்டித்து மறியல்
ADDED : பிப் 04, 2025 11:57 PM
பொள்ளாச்சி; ஆனைமலையில், மயக்க மருந்து கொடுத்து பெண்ணை கடத்திய வழக்கில், அவர்களை அழைத்துச் சென்ற ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்டார். போலீசார் மிரட்டியதால், அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறி நேற்று உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
ஆனைமலையை சேர்ந்த ஆறுச்சாமி மனைவி சாந்தி, 56; கூலித்தொழிலாளி. இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் லோகநாயகி,49. அதே பகுதியை சேர்ந்த லோகநாயகியின் தோழி மகேஸ்வரி, 40, ஆகியோர் மகளிர் சுய உதவிக்குழுவில் பணம் பெற்று தருவதாக கூறி சாந்தியை கடந்த, 28ம் தேதி ஆட்டோவில் அழைத்துச் சென்றனர்.
நா.மூ., சுங்கம் சென்ற அவர்கள், பேக்கரியில் குளிர்பானம் குடித்தனர். அப்போது, குளிர்பானத்தில் துாக்க மாத்திரை கலந்து சாந்திக்கு கொடுத்தனர். அதன்பின் அங்கிருந்து, வேறு ஆட்டோவில் சாமராயப்பட்டி காளியம்மன் கோவில் அருகே சென்று, மயக்க நிலையில் இருந்த சாந்தியிடம் இருந்து, நான்கரை பவுன் நகையை பறித்துச் சென்றனர்.
மயக்க நிலையில் இருந்த சாந்தியை அவ்வழியாக சென்றோர் மீட்டு, உடுமலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சாந்தி அளித்த புகாரின் பேரில், ஆனைமலை போலீசார் பெண்கள் இருவரையும் கைது செய்தனர்.
இந்நிலையில், மூவரையும் நா.மூ., சுங்கத்துக்கு அழைத்து சென்ற, ஆட்டோ டிரைவர் ஆனைமலை சுள்ளிமேட்டுபதியை சேர்ந்த பாலகிருஷ்ணன், 61, கோட்டூர் ரமணமுதலிபுதுார் டாஸ்மாக் கடை அருகே, மதுவில் பூச்சி மாத்திரை கலந்து குடித்து, நேற்று தற்கொலை செய்து கொண்டார்.
அவர், தற்கொலை செய்ததற்கு போலீஸ் தான் காரணம் எனக்கூறி, ஆனைமலை - முக்கோணம் ரோட்டில் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் போலீசார் பேச்சு நடத்தினர்.
உறவினர்கள் கூறுகையில், 'ஆட்டோ டிரைவர் பாலகிருஷ்ணனை அழைத்துச் சென்று போலீசார் மிரட்டியுள்ளனர்; விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கியும் எஸ்.ஐ., அடித்துள்ளார். இதற்கு உரிய விளக்கம் அளிக்கும் வரை கலைந்து செல்ல மாட்டோம்,' என்றனர்.
அதன்பின், விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறியதையடுத்து, போராட்டத்தை கைவிட்டு கலைந்துசென்றனர்.