/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற அதிகாரிகள் கெடு
/
ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற அதிகாரிகள் கெடு
ADDED : செப் 25, 2024 08:40 PM

வால்பாறை : சுற்றுலா பயணியர் அதிகளவில் வந்து செல்லும் வால்பாறை நகரில், நெடுஞ்சாலைத்துறை ரோட்டை ஆக்கிரமித்து வியாபாரிகள் கடை வைத்துள்ளனர். இதனால், வால்பாறை நகரில் பொதுமக்கள் நடைபாதையை பயன்படுத்த முடியாமல் தவிக்கின்றனர்.
மேலும், பொதுமக்கள் ரோட்டில் நடந்து செல்லும் போது, அதிவேகமாக வரும் வாகனங்களால் விபத்து ஏற்படுகிறது. எனவே, வால்பாறை நகரில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என்ற, பொதுமக்களின் கோரிக்கை, 'தினமலர்' நாளிதழில் நேற்று படத்துடன் செய்தியாக வெளியானது.
இதனையடுத்து, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் தினேஷ்குமார், உதவி பொறியாளர் பிரதீப் ஆகியோரின் உத்தரவின் பேரில், வால்பாறை நகரில் ரோட்டை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளை அகற்றக்கோரி, நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் நோட்டீஸ் வழங்கினர்.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'சுற்றுலா பயணியர் அதிகளவில் வந்து செல்லும் வால்பாறை நகரில், சாலையோர கடைகளால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதை தடுக்கும் வகையில், நெடுஞ்சாலைத்துறை ரோட்டை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளை ஒரு வாரகாலத்திற்குள் வியாபாரிகள் அகற்ற வேண்டும். தவறும் பட்சத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் கடைகள் அப்புறப்படுத்தப்படும்,' என்றனர்.