/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சூறாவளி காற்றால் வாழை மரங்கள் சேதம்
/
சூறாவளி காற்றால் வாழை மரங்கள் சேதம்
ADDED : ஏப் 07, 2025 09:58 PM

மேட்டுப்பாளையம்; காரமடை மேற்கு பகுதியில் வீசிய சூறாவளி காற்றால், கெம்மாரம்பாளையம் ஊராட்சியில், 2000க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதம் அடைந்தன.
காரமடை மேற்கு பகுதியான கெம்மாரம்பாளையம், காளம்பாளையம், வெள்ளியங்காடு, தோலம்பாளையம் ஆகிய ஊராட்சிகளில் உள்ள கிராமங்களில், நேந்திரன், கதலி, ரோபஸ்டா, செவ்வாழை, பூவன் உள்ளிட்ட வாழைகளை விவசாயிகள் பயிர் செய்துள்ளனர். இதில் பெரும்பாலான கிராமங்களில் உள்ள வாழை மரங்களில் தார் விட்டுள்ளன. இன்னும் இரண்டு மாதங்களில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தன.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த காற்றால் கெம்மாரம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பனப்பாளையம் புதூர், கண்டியூர், சாலை வேம்பு சுற்றுப்பகுதிகளில் உள்ள, பத்துக்கு மேற்பட்ட விவசாய நிலங்களில் இருந்த, இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து விழுந்தன. மேலும் விவசாய நிலங்களில் இருந்த மின் கம்பங்களும் முறிந்து கீழே விழுந்தன. இந்த சூறாவளி காற்றால், வாழை பயிர் செய்த விவசாயிகளுக்கு, பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: வங்கி மற்றும் தனியாரிடம் கடன் பெற்று, ஒவ்வொரு விவசாயிகளும் வாழை பயிர் செய்துள்ளனர். ஆனால் இதுபோன்று இயற்கை பேரிடரால் வாழை மரங்கள் சேதம் அடையும் போது, விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது. தமிழக அரசு வருவாய் மற்றும் வேளாண்மை ஆகிய இரு துறை அதிகாரிகளையும், வாழையின் சேதங்களை கணக்கிட செய்து, இழப்பீட்டுத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் கூறினர்.