/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காட்சி பொருட்களாக நிற்கும் பேட்டரி வாகனங்கள்
/
காட்சி பொருட்களாக நிற்கும் பேட்டரி வாகனங்கள்
ADDED : அக் 29, 2025 12:30 AM

சூலுார்: ஊராட்சிகளுக்கு அனுப்ப வேண்டிய பேட்டரி வாகனங்கள், சூலுார் யூனியன் அலுவலகத்தில் காட்சி பொருளாக நிற்கின்றன.
சூலுார் ஊராட்சி ஒன்றியத்தில், 17 ஊராட்சிகள் உள்ளன. இதில், நீலம்பூர், சின்னியம்பாளையம், அரசூர், கணியூர் , பட்டணம், காடாம்பாடி, காங்கயம் பாளையம் உள்ளிட்ட பெரிய ஊராட்சிகளில், மக்கள் தொகை அதிகம். சேகரிக்கப்படும் குப்பையும் அதிகம்.
துாய்மை காவலர்கள் வீடு வீடாக பேட்டரி வாகனங்களில் சென்று குப்பையை சேகரித்து செல்வது வழக்கம். பல ஊராட்சிகளில் பேட்டரி வாகனங்கள் பழுதாகி முடங்கியுள்ளன. இதனால், குப்பை சேகரிக்கும் பணி தொய்வடைந்துள்ளது. இந்நிலையில், சூலுார் ஒன்றிய ஊராட்சிகளின் பயன்பாட்டுக்கு என, 20 பேட்டரி வாகனங்கள் ஒதுக்கப்பட்டு, சூலுார் அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. ஊராட்சிகளுக்கு அனுப்பப்படாமல், பல நாட்களாக வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும் காட்சி பொருளாக நிற்கின்றன. இதனால், ஊராட்சிகளில் குப்பை சேகரிக்கும் பணி முடங்கியுள்ளது.
இதுகுறித்து துாய்மை காவலர்கள் கூறுகையில், ''பெரிய ஊராட்சிகளில் தினமும் டன் கணக்கில் குப்பை சேகரிக்க வேண்டியுள்ளது. பேட்டரி வாகனங்கள் இல்லாததால், பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஒரு வீதிக்கு ஒரு நாள் செல்லவில்லை என்றால் குப்பை மலை போல் தேங்கி விடும். பேட்டரி வாகனங்கள் இருந்தால், ஒரு முறைக்கு இரு முறை சென்று குப்பையை சேகரித்து விடுவோம்'' என்றனர்.

