/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஊராட்சிகளுக்கு பேட்டரி வாகனங்கள் வந்தாச்சு
/
ஊராட்சிகளுக்கு பேட்டரி வாகனங்கள் வந்தாச்சு
ADDED : நவ 02, 2025 10:11 PM
சூலூர்: சூலூர் யூனியன் அலுவலகத்தில் காட்சி பொருளாக நின்றிருந்த பேட்டரி வாகனங்கள் ஊராட்சி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டன.
சூலூர் ஊராட்சி ஒன்றியத்தில், 17 ஊராட்சிகள் உள்ளன. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், ஊராட்சிகளில் குப்பை சேகரிக்க பேட்டரி வாகனங்கள் வழங்கப்படுகின்றன.
இந்த வாகனங்களை பயன்படுத்தி, தூய்மை காவலர்கள் வீடு, வீடாக சென்று, எளிதாக குப்பை சேகரித்து வருகின்றனர். பல ஊராட்சிகளில் பேட்டரி வாகனங்கள் பழுதாகி உள்ளதால், பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
இந்நிலையில், சூலூர் ஒன்றிய ஊராட்சிகளுக்கு, 20 பேட்டரி வாகனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அவை யூனியன் அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்தன. பல நாட்களாக காட்சி பொருளாக நிறுத்தப்பட்டிருப்பது குறித்து, நமது தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
இதையடுத்து, அந்த வாகனங்களை, ஊராட்சிகளுக்கு உடனடியாக அனுப்பப்பட்டன. தங்கள் ஊராட்சிகளுக்கு, புதிய பேட்டரி வாகனங்கள் வந்துள்ளதால், தூய்மை காவலர்கள் மகிழ்ச்சியுடன் பணியில் ஈடுபட துவங்கினர்.
இதுகுறித்து தூய்மை பணியாளர்கள் கூறுகையில், 'பேட்டரி வாகனங்கள் பழுதாகி முடங்கியதால், குப்பை சேகரிக்க முடியாமல் தாமதம் ஏற்பட்டது. புது வண்டி வந்துள்ளதால், குப்பை சேகரிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது' என்றனர்.

