ADDED : மே 12, 2025 11:28 PM

மேட்டுப்பாளையம்; சிறுமுகையில், 9 மாணவிகளின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி நடந்தது.
சிறுமுகை ஸ்ரீ கிருஷ்ணா நாட்டியாலயா நாட்டிய பள்ளியில் படித்து வரும் மோஹிதா, திவ்யதர்ஷினி, சுவாதிகா, தன்யா, சுபிட்ஷா, ஓவியா, அக்ஷயா, மதுப்ரசித்தா, மதுஸ்ரீ ஆகிய 9 மாணவிகளின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி, சிறுமுகையில் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. முன்னதாக ரேயான் நகர் மாதேஸ்வரன் கோவிலில், நாட்டிய குரு பிருந்தா குமாரி, நடராஜ பெருமானுக்கு அபிஷேகம் மற்றும் சலங்கை பூஜை செய்து, மாணவிகளுக்கு சலங்கை அணிவித்தார். இதை அடுத்து மண்டபத்தில் மாணவர்களின் பெற்றோருக்கு பாத பூஜை செய்யப்பட்டது. அரங்கேற்ற நிகழ்ச்சிக்கு ஸ்ரீ கிருஷ்ணா நாட்டிய கலாச்சேத்ரா இயக்குனர் பொன்னம்பலம் தலைமை வகித்தார். உடுமலை நாட்டியாஞ்சலி இயக்குனர் செல்வி, இலக்கிய சொற்பொழிவாளர் சித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாணவிகள், புஷ்பாஞ்சலி, லயக்கவிதை, காவடி, சிந்து, குறவஞ்சி, தில்லானா என பத்துக்கும் மேற்பட்ட பாடல்களுக்கு நடனம் ஆடினர். நிகழ்ச்சிகளை சுவாதிகா தொகுத்து வழங்கினார். மகேந்திரன் நன்றி கூறினார். விழாவில் மாணவிகளின் பெற்றோர், உறவினர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.