பில்லூர் அணை நிரம்பி வழியும் வாய்ப்பு:கேரளத்தில் பருவமழை தீவிரம்
பில்லூர் அணை நிரம்பி வழியும் வாய்ப்பு:கேரளத்தில் பருவமழை தீவிரம்
UPDATED : ஜூலை 05, 2026 05:15 AM
ADDED : ஜூலை 04, 2026 05:22 PM

மேட்டுப்பாளையம்: கேரளத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வருவதை அடுத்து, பில்லூர் அணைக்கு வினாடிக்கு, 6,000 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அதனால் அணை நிரம்ப வாய்ப்பு உள்ளது.
கோவை மாவட்டம், காரமடை வனப்பகுதியில், பில்லூர் அணை உள்ளது. அணையின் நீர்மட்ட உயரம் 100 அடி. அணையின் பாதுகாப்பு நலன் கருதி, 97 அடிக்கு நீர்மட்டம் உயரும்போது, அணை நிரம்பியதாக கருதப்படும். அணை நிரம்பினால், அணைக்கு வருகின்ற தண்ணீர் முழுவதையும், நான்கு மதகுகள் வழியாகவும், மின் உற்பத்தி செய்யவும் திறந்து விடப்படும்.
கேரளத்தில் தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கியுள்ளதால், பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இரு தினங்களுக்கு முன் அணைக்கு வினாடிக்கு, 3 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
கடந்த 1ம் தேதி அணையின் நீர்மட்டம், 90 அடியாக இருந்தது. நேற்று மதியம் வரை, அணைக்கு வினாடிக்கு 6000 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
அதனால் அணையின் நீர்மட்டம், 95 அடியை எட்டியது. அணை நிரம்ப இரண்டு அடியே உள்ளது. மின் உற்பத்தி செய்ய, 6000 கன அடி தண்ணீர் அணையில் இருந்து திறந்து விடப்படுகிறது.
இதனால் பவானி ஆற்றில் வழக்கத்தை விட தண்ணீர் அதிகமாக பாய்கிறது. பருவமழை தீவிரம் அடைந்தால் பில்லூர் அணை நிரம்பி வழிய வாய்ப்புள்ளது.
மாவட்ட நிர்வாகம், மேட்டுப்பாளையம் வருவாய்த்துறை மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர் வெள்ள தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
