/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிஸ்கட் கம்பெனி டீலரிடம் 90 லட்சம் ரூபாய் மோசடி
/
பிஸ்கட் கம்பெனி டீலரிடம் 90 லட்சம் ரூபாய் மோசடி
ADDED : ஜன 24, 2025 11:07 PM
கோவை; பிஸ்கட் கம்பெனி டீலரிடம் ரூ. 90 லட்சம் மோசடி செய்த, ஆன்லைன் மோசடி கும்பல் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
கோவை, பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் செந்தில், 40; பிஸ்கட் கம்பெனி டீலர். இவர் தனது பெயரில் ஒரு 'டி மேட்' கணக்கு துவங்கி, சிறிய அளவில் டிரேடிங் செய்து வந்துள்ளார். பெரிய அளவில் டிரேடிங் செய்து, வருமானம் ஈட்டுவதற்காக இணையத்தில் படித்து வந்தார்.
அப்போது அவர், இணையத்தில் டிரேடிங் குறித்த 'லிங்க்' ஒன்றை பார்த்தார். அதை 'கிளிக்' செய்தவுடன் அவரின் எண், 'ஆரயா பைனான்ஸ் அலையன்ஸ் ஜி222' என்ற வாட்ஸ் அப் குரூப்பில் இணைக்கப்பட்டது. தொடர்ந்து, அதன் மூலம் ஆரயா பைனான்ஸ் அலையன்ஸ் ஜி222' செயலியை, செந்தில் பதிவிறக்கம் செய்தார்.
அந்த செயலியை பயன்படுத்தி, கடந்தாண்டு டிச., 7ம் தேதி டிரேடிங் செய்ய துவங்கினார். ஆரம்பத்தில் ரூ. 2 லட்சம் முதலீடு செய்துள்ளார். ரூ.3 லட்சம் லாபம் கிடைத்தது. அதை தனது வங்கி கணக்கிற்கு மாற்றிக்கொண்டார்.
இதனால் நம்பிக்கை பெற்ற செந்தில், தனது பெயர் மற்றும் தனது மனைவியின் பெயரில் ரூ. 90 லட்சம் முதலீடு செய்தார். ரூ.2.70 கோடி லாபம் கிடைத்துள்ளது. ஒரு கட்டத்தில், பணத்தை எடுக்க செந்தில் முயற்சித்தார்.
ஆனால் அதை அவரால் எடுக்க முடியவில்லை. இது குறித்து தனது நண்பர்களிடம் விசாரித்த போது, தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. செந்தில் அளித்த புகாரின்படி, மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

