/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இருவாச்சி பறவைகளை ரசிக்கும் சுற்றுலா பயணியர்
/
இருவாச்சி பறவைகளை ரசிக்கும் சுற்றுலா பயணியர்
ADDED : பிப் 20, 2025 10:17 PM

வால்பாறை; வால்பாறையில், உலா வரும் இருவாச்சி பறவைகளை சுற்றுலா பயணியர் கண்டு ரசிக்கின்றனர்.
வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய இரு வனச்சரகங்களிலும் பல்வேறு வகையான பறவைகள் உள்ளன.பழைய வால்பாறை, புதுத்தோட்டம், அக்காமலை கிராஸ்ஹில்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் 'ஹார்ன்பில்' என்றழைக்கப்படும் இருவாச்சி பறவைகள் அதிகளவில் உள்ளன.
'ஹார்ன்பில்' மரத்தில் கூடுகட்டி, குடும்பமாக வாழும் தன்மை கொண்டவை. இந்த பறவையின் இனப்பெருக்க காலம், பிப்., முதல் மே மாதம் வரையாகும். 30 ஆண்டு முதல் 40 ஆண்டு வரை வாழக்கூடிய இந்தப்பறவை, எப்போதும் இணையுடன் தான் வெளியில் செல்லும்.
வால்பாறையில், தற்போது பனிப்பொழிவுடன் கூடிய வெயில் நிலவுவதால், இருவாச்சி பறவைகள், இரை தேடி வெளியில் வரத்துவங்கியுள்ளன.இப்பறவைகள் பகல் நேரத்தில் வெளியில் சுற்றித்திரிவதை, சுற்றுலா பயணியர் வெகுவாக கண்டு ரசிக்கின்றனர்.
பறவை ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது:
இந்தியாவில் மேற்குதொடர்ச்சி மலையில் இருவாச்சி பறவைகள் அதிகளவில் காணப்படுகின்றன. உலக அளவில், 54 வகையான இருவாச்சிப்பறவைகள் உள்ளன.
மேற்குதொடர்ச்சி மலையில் அமைந்துள்ள வால்பாறையில் இருவாச்சி பறவைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இருவாச்சியை பொறுத்த வரை, ஆண்டு தோறும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் மட்டுமே இணை சேரும். ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும். முட்டையிட்ட, 24 நாட்கள் கழித்த பின் குஞ்சு பொரிக்கும். ஆண் இருவாச்சி பறவையின் கண் சிகப்பு நிறத்தில் காணப்படும்.
இருவாச்சி பறவையை பொறுத்த வரை, எப்போதும் இணையுடன் தான் இருக்கும். இரை தேட சென்றாலும், கூண்டில் இருந்தாலும், இணையுடனேயே இருக்கும்.
இவ்வாறு, கூறினர்.