பத்திர பதிவு இ-டெண்டர் முறை: பத்திர எழுத்தர்கள் போராட்டம்
பத்திர பதிவு இ-டெண்டர் முறை: பத்திர எழுத்தர்கள் போராட்டம்
UPDATED : நவ 10, 2026 06:13 PM
ADDED : நவ 10, 2026 06:00 PM

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சார் பதிவாளர் அலுவலகம் முன்பாக, பத்திர எழுத்தர்கள் சார்பில் அமைதி போராட்டம் நடந்தது.
பத்திர பதிவில் அரசு கொண்டுவந்துள்ள இ-டெண்டர் முறையை ரத்து செய்யக்கோரி, கிணத்துக்கடவு பத்திர எழுத்தர்கள் சங்கத்தினர் சார்பில், கடந்த 6ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் நடக்கிறது.
இந்நிலையில், இன்று (நவ.,10) சார் பதிவாளர் அலுவலகம் முன்பாக, அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், பத்திர பதிவு செய்ய வந்த நபர்களிடம், இ-டெண்டர் முறையால் ஏற்படும் விளைவுகள் குறித்து விளக்கம் அளித்ததுடன், அவர்களை திரும்பி செல்லும்படி அறிவுறுத்தினார்கள்.
போராட்டத்தில், சங்க தலைவர் லதா, செயலாளர் குணசேகரன், பொருளாளர் ஆறுமுகம் மற்றும் பத்திர எழுத்தர்கள் கலந்து கொண்டனர்.
கிணத்துக்கடவு பத்திர எழுத்தர்கள் சங்கத்தினர் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பத்திர எழுத்தர்கள் சார்பில், 2 நாட்கள் போராட்டம் நடத்துகிறோம். மேலும், பத்திரப்பதிவுத்துறை அலுவலகம் வரும் வாடிக்கையாளர்களை திருப்பி அனுப்புகிறோம். இ-டெண்டர் முறை வந்தால் பலர் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.
கடந்த சில ஆண்டுகளாக, ஒவ்வொரு பத்திரமும் பதியும் போது, 10 ரூபாய் நல நிதி வசூலிக்கப்படுகிறது. இது பத்திர எழுத்தர்கள் எவரேனும் பாதிக்கப்பட்டால், அவர்கள் குடும்பங்களுக்கு நலநிதி வாயிலாக உதவி செய்யப்படும். ஆனால், பெரும்பாலானோருக்கு இன்று வரை எந்த உதவியும் கிடைக்கவில்லை. இந்த நிதியை பெற எப்படி விண்ணப்பிப்பது என்பது கூட தெரியாது.
அரசால் அங்கீகரிக்கப்பட்ட பத்திர எழுத்தர்களுக்கும் தொழில் பறிபோகும் வாய்ப்பு உள்ளது. எனவே, அரசு இந்த இ-டெண்டர் முறையை கைவிட வேண்டும். இல்லாவிட்டால், அடுத்த கட்ட போராட்டம் தொடரும்.
இவ்வாறு, கூறினர்.
