/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'நிபா' பாதிப்பு: பழம் வாங்கும்போது பத்திரம்
/
'நிபா' பாதிப்பு: பழம் வாங்கும்போது பத்திரம்
ADDED : ஜூலை 09, 2025 10:32 PM
கோவை; கோவை மாவட்டத்தில், நிபா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக, முன்னெச்சரிக்கை செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பாலுச்சாமி தெரிவித்தார்.
கேரளாவில், நிபா வைரஸ் பரவல் உள்ளது. ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்றொருவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். 300க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கேரளா எல்லை ஒட்டியுள்ளதால், கோவை மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதுகுறித்து, மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பாலுச்சாமி கூறியதாவது:
கோவையிலுள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவமனைகளுக்கு, நிபா வைரஸ் குறித்த அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளோம். காய்ச்சல் காரணமாக வருபவர்களை கண்காணித்து, உடனுக்குடன் தகவல் அளிக்க அறிவுறுத்தியுள்ளோம்.
காய்ச்சல், வறண்ட இருமல், அடிக்கடி சோர்வு, சிலருக்கு வலிப்பு ஆகியவை அறிகுறிகள். கேரளாவில் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வவ்வால் சாப்பிட்ட பழங்கள், அதன் எச்சம் வாயிலாக பரவுவதால், பழங்கள் வாங்கும்போது கவனமாக வாங்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.