(நான் படிக்கும் புத்தகம்) மனதோடு நிகழ்த்தும் மவுன உரையாடல்
(நான் படிக்கும் புத்தகம்) மனதோடு நிகழ்த்தும் மவுன உரையாடல்
UPDATED : நவ 21, 2026 01:22 PM
ADDED : நவ 21, 2026 01:22 PM
கோவை: எழுத்தாளர் சோம.வள்ளியப்பன் எழுதிய ‘மனதோடு ஒரு சிட்டிங்’ என்ற நுால் குறித்து, கவிஞர் மைதிலி யோகராஜ் தனது வாசிப்பனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
மனிதன் தன் வாழ்நாளில் அதிகம் போராடுவது வெளி உலகத்தோடுதான் என்று நினைக்கிறான். ஆனால் பல நேரங்களில் அவனுடைய உண்மையான போராட்டம் அவனுடைய மனதுடன்தான் நிகழ்கிறது.
சொல்ல வேண்டிய இடத்தில் மவுனமாக இருந்து விட்டு, மவுனமாக இருக்க வேண்டிய இடத்தில் பேசிவிட்டு, நடந்தவற்றை நினைத்து வருந்துவதும், நடக்காதவற்றை நினைத்துக் கவலைப்படுவதும் என, மனம் நம்மை எத்தனையோ திசைகளில் இழுத்துச் செல்கிறது.
இந்த மனம் ஏன் இப்படிச் செயல்படுகிறது, நம்முடைய எண்ணங்களுக்கும் செயல்களுக்கும் இடையே என்ன தொடர்பு உள்ளது, மனம் நம்முடைய கட்டுப்பாட்டில் இருக்கிறதா அல்லது அதன் விருப்பத்துக்கு ஏற்ப நாம் வாழ்கிறோமா என, பல கேள்விகளை எழுப்பி நம்மை சிந்திக்க வைக்கிறது, ‘மனதோடு ஒரு சிட்டிங்’ என்ற இந்த நுால்.
மனதின் செயல்பாடுகளை பல கோணங்களில் ஆராய்ந்து, அவற்றைப் புரிந்துகொள்வதற்கான நடைமுறை அணுகுமுறைகளை சொல்கிறது.
மனம் என்பது வெறும் எண்ணங்களின் தொகுப்பு மட்டுமல்ல; நம்முடைய முடிவுகள், செயல்கள், உறவுகள் ஆகியவற்றிலும் அது முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதை உணரச் செய்கிறது.
கடினமான கோட்பாடுகளுக்குள் சிக்கிக்கொள்ளாமல், அன்றாட வாழ்க்கையுடன் தொடர்புபடுத்தி மனதைப் புரிந்துகொள்ள உதவும் வகையில் இந்நுால் அமைந்துள்ளது. பிறருடைய குறைகளை ஆராய்வதற்கு முன்பாக, நம்முடைய எண்ணங்களையும் செயல்களையும் கவனிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது. மனதைப் புரிந்துகொள்வது மட்டுமல்லாமல், அதை நமக்கு சாதகமாகப் பயன்படுத்துவது எப்படி என்பதையும் சிந்திக்க வைக்கிறது.
மனதை வெல்வது கடினம். வாழ்க்கையில் போராடும்போது நமக்கு எதிரில் இருப்பவர் யார் என தெரியும். மனத்துடன் போராடும் போது எதிரியும் நாமாகவே இருக்கிறோம். போராடுபவரும் நாமாக இருக்கிறோம். நம்முடைய மனம் நமக்கு நண்பனாக இருக்கிறதா, எதிரியாக இருக்கிறதா என்பதை உணர்ந்து கொள்ள உதவும் ஒரு சிந்தனைப் பயணத்துக்கான கையேடாகவும், நம் வாழ்க்கையை மிக இயல்பாக திட்டமிட்டபடி நடக்க, நம் மனதுடன் அமர்ந்து பேசுவதற்கான ஒரு வழிகாட்டியாகவும் இந்த நுால் உள்ளது.
வீட்டுக்கு வாஸ்து பார்த்து சரி செய்வது போல், மனதுக்கும் வாஸ்து பார்த்து சரி சொல்லும் வகையில் சுவர்களாக, அறைகளாக என அணு அணுவாக மனதை ஆராய்ச்சி செய்து சொல்லியிருக்கிறார் நுாலாசிரியர்.
மனதைப் புரிந்துகொள்வதற்கான சுயபரிசோதனை முறைகளை ஒரு நண்பன் அறிவுரை கூறுவது போல் கூறி இருக்கிறார். மூளைக்கும் மனதுக்கும் இருக்கும் தொடர்பினையும், மனமே மூளையின் முதலாளி என்பதையும் உணர்த்துகிறது. மனதை நாம் சுத்தப்படுத்திக் கொண்டேயிருக்க வேண்டும் என்பதனை வலியுறுத்துகிறது இந்நூல்.
மனிதன் பிறருக்காக ஒதுக்கும் நேரத்தில் சிறிதளவாவது தனக்காகவும், தன் மனதுக்காகவும் ஒதுக்க வேண்டும் என்பதை விளக்குகிறது. நம் வாழ்க்கையில் தன்னம்பிக்கை, சுயமுன்னேற்றம், பக்குவம், தெளிவு, மகிழ்ச்சி, நிம்மதி ஆகியவற்றை ஒட்டுமொத்தமாக உணர வைக்கிறது.
மனதுடன் பேசுவதற்குத் தனிமை மட்டும் போதாது; நம்மை நாமே நேர்மையாக எதிர்கொள்ளும் துணிவும் வேண்டும். அந்தத் துணிவை நோக்கி நம்மை அழைக்கும் ஒரு சிந்தனைத் துாண்டலாக ‘மனதோடு ஒரு சிட்டிங்’ நுால் உள்ளது.
வாழ்க்கையில் போராடும்போது நமக்கு எதிரில் இருப்பவர் யார் என தெரியும். மனத்துடன் போராடும் போது எதிரியும் நாமாகவே இருக்கிறோம். போராடுபவரும் நாமாக இருக்கிறோம்.
