UPDATED : நவ 03, 2026 12:00 AM
ADDED : நவ 02, 2026 11:45 PM
திருப்பூர்: திருப்பூரில் லஞ்சம் வாங்கிய வீடியோ வெளியானதை அடுத்து எஸ்.எஸ்.ஐ. ஆயுதப் படைக்கு மாற்றப்பட்டார்.
திருப்பூர் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட நல்லுார் காவல் நிலையத்தில் எஸ்.எஸ்.ஐ.யாக பணியாற்றி வந்தவர் சின்னமுருகன், 59. கடந்த வாரம் கோவில் வழி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது வாகன ஓட்டிகள் சிலரிடம் அபராதம் விதிக்காமல் இருக்க ரூ.500 முதல் ரூ.1000 வரை லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது.
அதில், டூவீலரில் வந்த வாகன ஓட்டி ஒருவர் பணத்தை போலீஸ் வாகனத்தில் வைப்பது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து, லஞ்ச புகாரில் சிக்கிய எஸ்.எஸ்.ஐ. சின்னமுருகனை மாநகர ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து திருப்பூர் போலீஸ் கமிஷனர் ராஜேஸ்வரி உத்தர விட்டார். அவரிடம் விசாரணை நடத்திய பின் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
