ADDED : செப் 03, 2026 03:20 PM
வால்பாறை: வால்பாறையில், மண்சரிவை தடுக்கும் வகையில் தடுப்புச்சுவர் கட்ட வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வால்பாறை அண்ணாநகரில், உயரமான இடத்தில் வீடு கட்டி வசிக்கும் கிருஷ்ணமூர்த்தி என்பவரின் வீட்டின் பின்பக்கம், கடந்த வாரம் கனமழையின் போது மண் சரிவு ஏற்பட்டது. இதனால் மேலும் மண் சரிவு ஏற்பட்டு வீடு சரிந்துவிடுமோ என்ற பயத்தில், அப்பகுதி மக்கள் வசிக்கின்றனர்.
பொதுமக்கள் கூறியதாவது:
எஸ்டேட்டில் கூலி வேலை செய்து சொந்தமாக வீடு கட்டியுள்ளோம். மழை காலத்தில் வீட்டின் பின்புறம் மண்சரிந்து விழுகிறது. இது குறித்து பல முறை நகராட்சி அலுவலகத்தில் தெரிவித்தும், அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளவில்லை. மழை பெய்யும் போது, மேலும் மண் சரிவு ஏற்பட்டு, வீடுகள் சேதமடைவதற்கு முன், நகராட்சி சார்பில் வீட்டின் பின்புறம் தடுப்புச்சுவர் கட்டிக்கொடுக்க வேண்டும்.
மேலும், வீட்டின் பின்புறம் உள்ள பலாமரங்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். குடியிருப்பு பகுதியின் மிக அருகில் உள்ள புதரில் சிறுத்தை பதுங்குவதால் உயிருக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், புதரை அகற்ற நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.
