/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பூங்காவில் புதர் அகற்றும் பணி துவக்கம்
/
பூங்காவில் புதர் அகற்றும் பணி துவக்கம்
ADDED : ஜன 22, 2025 07:48 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி கந்தசாமி பூங்காவில் புதர் அகற்றும் பணி தன்னார்வ அமைப்பு வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது.
பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட, மரப்பேட்டை பகுதியில் கந்தசாமி பூங்கா உள்ளது. பராமரிப்பின்றி விஷ பூச்சிகள் அதிகம் உள்ளன. சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறியது.
இதையடுத்து கடந்த, 2014ம் ஆண்டுக்கு முன், சுற்றுலா வளர்ச்சி நிதி, 25 லட்சம் ரூபாய், பொள்ளாச்சி எம்.எல்.ஏ., நிதி, 25லட்சம்; நகராட்சி நிதி, 25லட்சம் ரூபாய் என மொத்தம், 75 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டது.
இதில், பூங்கா நடைபாதை, மின்னொளி, இருக்கை, அழகிய தாவர செடிகள் உள்ளிட்டவை இரண்டரை ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ளது. பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த பூங்காவுக்கு அதிகளவு பொதுமக்கள் வந்து சென்றனர். காலை நேர வாக்கிங் செல்லவும் பயன்படுத்தப்பட்டது. ஐந்து ரூபாய் நுழைவு கட்டணமாக வசூலிக்கப்பட்டது.
கொரோனா ஊரடங்கின் போது, பூங்கா பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு மூடப்பட்டது. அதன்பின், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விடாமல், குப்பை தரம் பிரித்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
பூங்கா போதிய பராமரிப்பின்றி மின் விளக்குகள் பொருத்தப்பட்ட சிமென்ட் கம்பம், நீருற்று, விலங்குகள் போன்றவை பராமரிப்பின்றி சிதிலமடைந்து காணப்படுகின்றன. புதர் வளர்ந்து, காடு போல காட்சியளித்தது.
பல லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட பூங்கா, தற்போது குப்பை தரம் பிரிக்கும் இடமாக மாறியது. கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் புதுப்பிக்கப்பட்ட பூங்கா போதிய பராமரிப்பின்றி உள்ளது. இதை பராமரித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில், பூங்காவில் வளர்ந்துள்ள புதர் அகற்றும் பணி மேற்கொள்ளப்படுகிறது. செடிகளை வெட்டி பணியாளர்கள் அகற்றினர். நகராட்சி அனுமதியோடு பொள்ளாச்சி வியாபாரிகள் சங்கம், ஆண்டாள் அறக்கட்டளை இணைந்து, சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்படுகிறது என அறக்கட்டளை தலைவரும், கவுன்சிலருமான சாந்தலிங்கம் தெரிவித்தார்.

